பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு


பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு
x
தினத்தந்தி 25 March 2021 10:24 PM IST (Updated: 25 March 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், ஊட்டி, குன்னூர் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா தேர்தல் பணிகளை ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகிறார்.

இந்த நிலையில் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி ஊராட்சி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு செய்தார்.

இதன்படி மசினகுடி ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளி மற்றும் மாயார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். 

பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி அரசு உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளை அவர் பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

பாதுகாப்பு வசதிகள்

நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணத்தினால் ஆயிரத்து 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 868 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் உறுதிசெய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

இதைத்தொடர்ந்து கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று தற்காலிக கூடாரம் அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல் வாக்குச்சாவடி மையங்களில் சாய்வு தளம் வசதிகள், கழிப்பிடம், தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 சட்டமன்ற தேர்தலின் போது எந்தவொரு சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் அலுவலர்கள் மற்றும் போலீசார் இணைந்து தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Next Story