552 சேலைகள், ரூ.3 லட்சம் பறிமுதல்


552 சேலைகள், ரூ.3 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 25 March 2021 10:43 PM IST (Updated: 25 March 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 552 சேலைகள், ரூ.3 லட்சத்தை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள காட்டம்பட்டியில் மாநில துணை வரி வசூல் அதிகாரி காளிரத்தினம் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் சேலைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் சேலைகளை கொண்டு வந்தவர் சேலம் மாவட்டம் தாராமங்கலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பதும், பொள்ளாச்சி அருகே சமத்தூரில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு சேலைகளை கொண்டு வந்ததும் தெரியவந்தது. 

ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் காரில் இருந்த சுமார் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 552 சேலைகளை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோன்று பொள்ளாச்சி அருகே நெகமத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் அந்த வழியாக வாகனத்தில் வந்த ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்த ராபர்ட் என்பவர் ரூ.69 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. 

ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனுப்பர்பாளையத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அதை கொண்டு வந்தது டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை அருகே சோமந்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.75 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமியிடம் ஒப்படைத்தனர்.

இதேபோன்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் தலைமையிலான பறக்கும் படையினர் கோவிந்தாபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.67 ஆயிரத்து 500-யை பறிமுதல் செய்தனர். மொத்தம் பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் 552 சேலைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story