உளுந்தூர்பேட்டை அருகே லாரி மோதி புதுமாப்பிள்ளை பலி அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பரிதாபம்
அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் லாரி மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை
மெக்கானிக்
உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 25). பொக்லைன் எந்திர மெக்கானிக். இவருக்கு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் ராம்குமார் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பகுதியில் உறவினர், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு மீண்டும் உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
லாரி மோதியது
அப்போது பின்னால் அதி வேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் ராம்குமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் லாரி மோதி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story