விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் தயார் செய்யும் பணி
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் படைவீரர்கள் அவர்களுடைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்க இயலாது என்பதால் தபால் மூலமாக வாக்கு அளிக்க தேர்தல் ஆணையத்தினால் வசதி செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் அவர்களுக்கும் இந்த தேர்தலில் இருந்து தபால் வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதவிர தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக அந்நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் தபால் வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தபால் வாக்குச்சீட்டுகள்
இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணியில் இருக்கும் அலுவலர்கள், ஊழியர்களின் எண்ணிக்கைக்கேற்பவும் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் தபால் வாக்குச்சீட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு தபால் வாக்குச்சீட்டுகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் தங்கியிருந்து வேலை செய்து வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ராணுவ வீரர்களும், தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் என 45 ஆயிரம் பேருக்கு தபால் வாக்குச்சீட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 11 லட்சத்து 13 ஆயிரத்து 976 வாக்காளர்கள் உள்ளனர்.
வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் தங்கியிருந்து வேலை செய்து வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள், தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் என 16 ஆயிரம் பேருக்கு தபால் வாக்குச்சீட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல்
இதில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், ஊழியர்கள், காவல்துறையினர்களுக்கு இன்று (26-ந் தேதி) முதல் அந்தந்த துறை அதிகாரிகள் மூலமாக தபால் வாக்குச்சீட்டு நேரில் வழங்கப்படும். அல்லது அவர்களது வீட்டு முகவரிக்கு தபால் வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்படும். அதுபோல் சர்வீஸ் பணியில் இருப்பவர்களின் முகவரிக்கே தபால் வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பயிற்சி வகுப்பில் நேரடியாக தபால் வாக்குச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களை பொறுத்தவரை அவர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்க மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் நேரடியாக மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் வீடு தேடிச்சென்று தபால் வாக்குச்சீட்டுகளை வழங்க உள்ளனர்.
தயார் செய்யும் பணி
இதையொட்டி அந்த தபால் வாக்குச்சீட்டுகளை அச்சடித்து தயார் செய்யும் பணிகள் விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 10 ஆயிரம் தபால் வாக்குச்சீட்டுகளும், விக்கிரவராண்டி, செஞ்சி, மயிலம், வானூர், திருக்கோவிலூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 7 ஆயிரம் தபால் வாக்குச்சீட்டுகளும், அதுபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் தலா 4 ஆயிரம் தபால் வாக்குச்சீட்டுகளும் அச்சடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
பாதுகாப்பான அறையில்
இதுகுறித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகையில், தபால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கும் பணி முடிவடைந்ததும் தொகுதி வாரியாக அவற்றை பிரித்து ஒரு இரும்பு பெட்டியில் பாதுகாப்பாக வைத்து அதை போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இதனை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரிபார்த்த பின்னர் அந்த தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டி பாதுகாப்பான அறையில் வைக்கப்படும். தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக தபால் வாக்குச்சீட்டுகள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story