‘தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்க கூடாது’
தேர்தல் பிரசாரத்தில் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்க கூடாது என்று அரசியல் கட்சியினருக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி, வால்பாறை (தனி) தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொடர்பான ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வைத்திநாதன் (பொள்ளாச்சி), துரைசாமி (வால்பாறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணா பேடியா கலந்துகொண்டு தேர்தலில் வேட்பாளர்களின் செலவினம் மற்றும் தேர்தல் விதிமுறைகள் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவு செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. செலவு செய்யப்படும் விவரங்கள் குறித்த ஆவணங்களை கொடுக்க வேண்டும். மேலும் வேட்பாளர்கள் கொடுத்த விவரங்களும், தேர்தல் அதிகாரிகளிடம் உள்ள விவரங்களும் சரியாக உள்ளதா? என்று ஆய்வு செய்யப்படும்.
தேர்தல் விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றார். இதில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தணிகைவேல், காந்திராஜ், ராஜா, வெங்கடாச்சலம் மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஓட்டு எண்ணும் மையம்
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் சீமா வியாஸ் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மற்றொரு கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனின் புகார் மனுவை, அ.தி.மு.க.வினர் தேர்தல் பார்வையாளர்களிடம் வழங்கினர்.
கூட்டத்தில் வேட்பாளர்கள் சார்பில் பிரதிநிதிகள் பேசும்போது கூறுகையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு ஓட்டு எண்ணும் மையம் பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டது.
இதேபோன்று பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஓட்டு எண்ணும் மையம் பொள்ளாச்சியில் அமைக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
தனிப்பட்ட முறையில்...
தேர்தல் பிரசாரத்தின்போது தனிநபர் குறித்து அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்யவோ அல்லது எந்தவொரு நபரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசவோ கூடாது. தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பிரசாரம் செய்ய வேண்டும். பொள்ளாச்சி நகரம் வளர்ந்து வரும் நகரமாகும்.
இங்கு படித்தவர்கள், அனுபவம் வாய்ந்த நபர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் வாக்குபதிவு சதவீதம் குறைவாக உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவை அதிகரிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பிரசாரத்திற்கு செல்லும்போது அரசியல் கட்சியினரும் பொதுமக்களை தேர்தலில் வாக்களிக்க அறிவுறுத்த வேண்டும். வாக்குபதிவின் போது சரக்கு வாகனங்களில் வாக்காளர்களை அழைத்து வரக்கூடாது. வாக்குச்சாவடி மையங்களில் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கையுறை, முகக்கவசம் வாக்காளர்களுக்கு வழங்கப்படும்.
வாக்காளர்களை சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வரவும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். பொள்ளாச்சியில் ஓட்டு எண்ணும் மையம் அமைப்பது குறித்த கோரிக்கை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story