குடிமராமத்து பணியில் ரூ.1500 கோடி கொள்ளையடித்த நீங்கள் விவசாயியா? செஞ்சி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி


குடிமராமத்து பணியில் ரூ.1500 கோடி கொள்ளையடித்த நீங்கள் விவசாயியா? செஞ்சி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 25 March 2021 11:20 PM IST (Updated: 25 March 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து பணியில் ரூ.1500 கோடிக்கு போலி பில்போட்டு கொள்ளையடித்த நீங்கள் விவசாயியா?. இனி நீங்கள் முதல்-அமைச்சர் ஆவேன் என்று கனவு கூட காண முடியாது என்று செஞ்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கூட்டுசாலை அருகில் நேற்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தி.மு.க. வேட்பாளர்களான செஞ்சி தொகுதியில் போட்டியிடும் மஸ்தான், மயிலம் தொகுதியில் போட்டியிடும் மாசிலாமணி, திண்டிவனம் தொகுதியில் போட்டியிடும் சீதாபதி சொக்கலிங்கம் ஆகியோரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா 2 -வது அலை 
எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் தான் ஸ்டாலின். அந்த அடிப்படையில் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ளேன்.
இப்போது, கொரோனா காலம் 2-வது அலை (ரவுண்டு) வந்துள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் பரவி தமிழகத்துக்குள் நுழைந்த போது, சட்டமன்றத்தில் முதல் முதலாக நான்தான் எடப்பாடி பழனிசாமியை பார்த்து, முதல்-அமைச்சர் அவர்களே நாடுமுழுக்க கொரோனா பரவுகிறது.

தமிழகத்துக்குள் நுழைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது, உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக என்ன முயற்சியில் இறங்கி உள்ளீர்கள் என்று கேள்வி கேட்டேன்.

அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஆட்சியில் கொரோனா தமிழகத்துக்குள் வரவே வராது என்றார். இருப்பினும், உயிரையே பலிவாங்க கூடிய வகையில் தொற்று நோய் வந்துள்ளது, கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் உயிர் போய்விடும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டேன். திரும்ப, திரும்ப கேட்டும் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு உயிரும் போகாது என்று விளக்கம் கொடுத்தார்.

சட்டமன்ற கூட்ட தொடரை ஒத்திவையுங்கள் அல்லது மாஸ்க் உள்ளிட்டவை கொடுங்கள் என்று கேட்டோம். அப்போது கூட, சர்க்கரை வியாதி, சுகர் பேசண்ட், வயதானவர்கள், இருதய நோய் உள்ளவர்களுக்கு தான் வரும், எனவே மாஸ்க் தேவையில்லை என்றார். அடுத்த நாள் மாஸ்குடன் வந்து உட்கார்ந்தார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

எந்த கட்சியும் செய்யாத சாதனை 

கொரோனா காலத்தில், அரசு எதுவும் செய்யவில்லை என்பதற்காக தி.மு.க. சார்பில் ஒன்றிணைவோம் வா என்கிற திட்டம் அறிவித்தோம். அதற்கென ஒரு தொலைபேசி எண்ணையும் வெளியிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தோம். கட்சியில் அத்தனை பேரும் களத்தில் இறங்கி பணி செய்தோம்.
 உலகத்தில் எந்த கட்சியும் செய்யாத சாதனையை தி.மு.க. செய்தது என்பதை நெஞ்சை நிமர்த்தி சொல்ல முடியும்.

இதில் நாம் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளருமான அன்பழகனை இழந்தோம் என்பதை நான் நினைத்து பார்க்கிறேன் இப்போது. ஏன் இங்கு வேட்பாளராக இருக்கும் நமது மஸ்தானுக்கும் தொற்று வந்தது.

அரசு பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்தும் ஆட்சி 

கொரோனா காலத்தில் ரூ.5 ஆயிரம் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நான் சொன்ன போது, நிதி இல்லை என்று சொன்னவர்கள், சிறிது நாளுக்கு பின்னர் 1000 ரூபாய் கொடுத்தார்கள். தேர்தல் நெருங்கி கொண்டு இருப்பதால் பொங்கல் பரிசு என்று பெயர் சூட்டி 2500 ரூபாய் கொடுத்தனர். மக்கள் கேட்ட போது கொடுக்கவில்லை, தேர்தல் நெருங்கியதால் கொடுத்தார்கள். அரசாங்க பணத்தை தேர்தலுக்காக பயன்படுத்திகிற ஆட்சி தான் நடந்து
 கொண்டுள்ளது.

மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்று நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்தியில், மாநிலத்தில் உள்ள ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறிமாறி வரியை போட்டு வருகிறார்கள்.

நீங்கள் கனவு கூட காண முடியாது 

இப்போது ரே‌‌ஷன் கடைகளில் தரம் இல்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டுகிறார்கள். தமிழ்நாடு ரே‌‌ஷன் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 34 ஆயிரத்துக்கு மேற்பட்டுள்ள கடைகளில் அரிசி, சர்க்கரையை தவிர்த்து தேவையில்லாத பொருட்களை மக்கள் தலையில் கட்டுமாறு ஊழியர்களை கட்டாயப்படுத்துவதாக கூறுகிறார்கள். இதைவிட மோசமான ஆட்சி கிடையவே கிடையாது.

இதுபோன்ற நிலையில், மக்களை குழப்பி வெற்றி பெற ஸ்டாலின் பொய் சொல்கிறார், சதி செய்கிறார் என்று தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். நான் சொல்கிறேன், மக்களை நான் குழப்பவில்லை. 

மக்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள். எப்போது 6-ந்தேதி வரப்போகிறது, இந்த ஆட்சியை ஒழிக்க போகிறோம் என்று மிக தெளிவாக உள்ளார்.
மேலும் ஸ்டாலின் கனவு காண்கிறார், அந்த கனவு பலிக்காது என்கிறார். நானாவது கனவு காண்கிறேன், ஆனால் நீங்கள் அடுத்து முதல்-அமைச்சர் பதவி வரும் என்பதை கனவு கூட காண முடியாது என்பதை புரிந்து
 கொள்ளுங்கள். அதுதான் உண்மை. 

எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று மக்கள் தெளிவாக உள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டம் 

10 ஆண்டுகாலம் சீரழிந்துள்ள இந்த தமிழகத்தை தி.மு.க. ஆட்சியால் தான் காப்பற்ற முடியும் என்று மக்கள் தெளிவாக உள்ளனர். அ.தி.மு.க. மட்டுமல்ல, பா.ஜனதாவை உள்ளே விட கூடாது என்றும், இதை தடுக்கும் ஆற்றல் தி.மு.க.வுக்கு தான் உண்டு என்பதையும் மக்கள் தெளிவாக உணர்ந்து இருக்கிறார்கள். 

இப்போது எனது சுற்றுபயணத்தில் மக்களிடம் உள்ள எழுச்சியை பார்த்தபின்னர், 234 தொகுதியிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

குடியுரிமை திருத்த சட்டம் வந்த போது, அதை ஆதரித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 11 பேர், அதோடு பா.ம.க.வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து ஓட்டு போட்டனர். 12 பேர் எதிர்த்து ஓட்டு போட்டு இருந்தால் அந்த சட்டம் நிறைவேறி இருக்க வாய்ப்பு இல்லை.

 அப்படிப்பட்டவர்கள் தான் அவர்கள். ஆகவே தான் பா.ஜ.க., அ.தி.மு.க., அதில் உள்ள கூட்டணியில் உள்ள கட்சியினரும் வந்தவிட கூடாது. அது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

விவசாயியா?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கு சென்றாலும், விவசாயி, விவசாயி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவர் விவசாயி அல்ல, போலி விவசாயி. பச்சை துண்டு போட்டால் விவசாயியா, அதை வைத்துக்கொண்டு பழனிசாமி திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டு இருந்தேன்.
 
விவசாயியை எனக்கு ரொம்ப பிடிக்கும், போலி விவசாயியை பிடிக்காது. பச்சை துண்டு பச்சை துரோகம் செய்கிறார் அதை தான் நான் சொல்கிறேன். உண்மையான விவசாயியாக இருந்தால் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து இருப்பாரா?.

1500 கோடி ரூபாய்க்கு குடிமராமத்து பணி தூர்வாரும் பணி என்று போலி பில் போட்டு கொள்ளை அடிக்கும் நீங்கள் விவசாயியா?, நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நடக்காமலம் ஊழல் செய்யும் நீங்கள் விவசாயியா?, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று சொன்னாலும் ஏற்கனவே அங்கு விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்கள் தான் தொடர்ந்து நடக்கிறது, இதை தடுக்க முடியாத நீங்கள் விவசாயியா? நீங்கள் விவசாயி அல்ல, வி‌‌ஷ வாயு. 
இவ்வாறு அவர் பேசினார்.



கொரோனா தடுப்பூசி எந்த பிரச்சினையும் செய்யாது:
தயவு செய்து மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள்
பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

செஞ்சி பிரசாரத்தின் போது, மு.க.ஸ்டாலின் பேசுகையில், தற்போது கொரோனா 2-வது அலை வருகிறது. இதுபோன்று கூட்டத்துக்கு வரும் போது தயவு செய்து மாஸ்க்வுடன்(முககவசம்) அணிந்து வாருங்கள். இங்கு வேட்பாளர்கள் கூட மாஸ்க் போடாமல் உள்ளனா. இப்போது அவசர அவசரமாக போடுகிறார்கள். 

என்னை பார்த்து, நீங்கள் ஏன் போடவில்லையே என்று கேட்கலாம். நான் கொஞ்சம் தூரத்தில், உயரத்தில் உள்ளேன். மற்ற நேரத்தில் மாஸ்க் போடுகிறேன் தடுப்பூசியும் போட்டுக்கொண்டேன். கூட்ட நெரிசலுக்கு வரும் போது மாஸ்க் போடாமல் வந்துவிடாதீர்கள். தடுப்பூசி எந்த பிரச்சினையும் செய்யாது. காய்ச்சல், தலைவலி வரும் என்று பயம் வேண்டாம்.

 சிலருக்கு வரலாம் வந்தாலும் 3 நாளில் சரியாகிவிடும். உங்களில் ஒருவனாக கேட்கிறேன், அன்போடு, உரிமையாய், அண்ணனான, தம்பியாக, தாய்மார்களே உங்களது மகனாக இருந்து கேட்கிறன். சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். நாம் நன்றாக இருந்தால் தான் நம்முடைய சந்ததியினரை நாம் காப்பாற்ற முடியும். அதனால் தான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 


Next Story