வருகிற 6 ந் தேதி வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் அச்சடித்து பொதுமக்களுக்கு வினியோகம்


வருகிற 6 ந் தேதி வாக்களிக்க வருமாறு  அழைப்பிதழ் அச்சடித்து பொதுமக்களுக்கு வினியோகம்
x
தினத்தந்தி 26 March 2021 12:30 AM IST (Updated: 26 March 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வருகிற 6-ந் தேதி வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் அச்சடித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

கோவை,

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வருகிற 6-ந் தேதி வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் அச்சடித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. 

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதி களில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் நூதன முறையில் தேர்தல் குறித்த அறிவிப்பை பிரசாரம் செய்து வருகிறார்கள். 

 அழைப்பிதழ் அச்சடித்து வினியோகம்

அதாவது வருகிற 6-ந் தேதி வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வருமாறு, திருமண அழைப்பிதழ் போன்று அச்சடித்து வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது

இதுகுறித்து கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி சரவணன் கூறியதாவது:-

தேர்தல் குறித்த அறிவிப்பை வித்தியாசமான முறையிலும், பொதுமக்கள் எளிதில் மறந்துவிடாத அளவுக்கு அவர்களிடம் கொண்டு செல்லவும், 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தவும் விழிப்புணர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி திருமண அழைப்பிதழ் போன்று வாக்களிக்க அழைப்பிதழ் என்ற பெயரில் அழைப்பிதழை அச்சடித்து உள்ளோம்.

தவறாமல் வாக்களிக்க வேண்டும்

அதில், ஏப்ரல் 6-ந் தேதி செவ்வாய்க்கிழமை தமிழக தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் நடக்கிறது என்றும், 18 வயது நிரம்பிய, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர்கள் தங்களின் குடும்பத்துடன் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி களுக்கு சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மேலும் அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும் என்றும் அதில் எழுதப்பட்டு உள்ளது. 

எனவே இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story