குமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் - கோணங்காட்டில் விஜய்வசந்த், பிரின்ஸ் வாக்குறுதி


குமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் - கோணங்காட்டில் விஜய்வசந்த், பிரின்ஸ் வாக்குறுதி
x
தினத்தந்தி 26 March 2021 1:46 AM IST (Updated: 26 March 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்பப்பூங்கா அமைக்கப்படும் என்று கோணங்காட்டில் விஜய்வசந்த், பிரின்ஸ் ஆகியோர் கூட்டாக பிரசாரம் செய்த போது வாக்குறுதி அளித்தனர்.

குளச்சல்,

குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு விஜய் வசந்த்தும், குளச்சல் சட்டசபை தொகுதியில்  பிரின்ஸ் எம்.எல்.ஏ.வும் போட்டியிடுகின்றனர். இதையொட்டி விஜய் வசந்த் மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

அதன்படி நேற்று குளச்சல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விஜய் வசந்த், பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆகிய இருவரும் கூட்டாக பிரசாரம் செய்தனர். 
இரவிபுதூர்க்கடை சந்திப்பு பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினர். தொடர்ந்து அவர்கள், வாழ்வச்சகோஷ்டம், கப்பியறை, மருதூர்குறிச்சி, முளகுமூடு, ஆத்திவிளை, மண்டைக்காடு, நெய்யூர், கல்லுக்கூட்டம், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பஞ்சாயத்து பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினர். 

மாலையில் கல்லுக்கூட்டம் பேரூராட்சி கோணங்காட்டில் வாக்குகள் சேகரித்தனர். அப்போது பொதுமக்களிடையே கூறியதாவது:-

இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும். 
அரசு வேலை வாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்படும். குமரியில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தி சர்வதேச தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த சூழியல் சுற்றுலா மையம் ஏற்படுத்தப்படும். குமரி மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் தோட்டக்கலை கல்லூரியாக தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரின்ஸ் ஆகியோருக்கு ஆதரவாக  முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் குளச்சல் பகுதியில் ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், நாடு இப்போது அசாதாரண நிலையில் உள்ளது. அதனால் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டிதான் பெங்களூருவில் வேலை பார்த்த என்னுடைய கலெக்டர் பதவியை ராஜினாமா செய்தேன். எதிர்க் காலத்தில் நம் சந்ததிகள் பாதிக்கப்படக்கூடாது. 

இது தேர்தல் போர் மட்டுமல்ல, மதத்தின் பெயரில் மக்களை பிரிக்க நினைப்பவர்களை துரத்தியடிக்கும் போர். நாம் ஒற்றுமையுடன் 100 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். நம் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். 

Next Story