சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 200-ஐ கடந்தது
மதுரையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.
மதுரை,மார்ச்
மதுரையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. மதுரையிலும் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில் நேற்று மதுரையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 35 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 608 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் நேற்று 8 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.
200-ஐ கடந்தது
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதால், மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மதுரை அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தமட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபோல், தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் சிகிச்சையில் இருக்கிறார்கள். தற்போது படிப்படியாக பாதிப்பு அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொரோனா வார்டில் பணி செய்யும் பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கும் கூடுதல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரம்
தேர்தல் நெருங்கி வருவதால் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக பிரசாரங்களில் கலந்து கொள்கிறார்கள். அவ்வாறு கலந்து கொள்ளும் போது, எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் இருக்கின்றனர். முக கவசம் அணிவது கிடையாது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கிடையாது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் தான் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும். வரும் நாட்களிலும் கொரோனாவின் தாக்கம் பெருமளவில் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். இப்போது விழித்து கொள்ளவில்லை என்றால் மீண்டும் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும். தேர்தல் பிரசாரத்திற்கு பெண்கள் செல்லும் போது குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story