பறக்கும்படை சோதனையில் ரூ.92 லட்சம் சிக்கியது


பறக்கும்படை சோதனையில் ரூ.92 லட்சம் சிக்கியது
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 லட்சம் பணத்துடன் வாகனம் சிக்கியது. அது வங்கி பணம் என ஆவணங்களை ஒப்படைத்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 லட்சம் பணத்துடன் வாகனம் சிக்கியது. அது வங்கி பணம் என ஆவணங்களை ஒப்படைத்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
வாகன சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி பகுதியில் துணை தாசில்தார் முத்துமாரி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். வாகனத்தின் உள்ளே 5 பெட்டிகள் இருந்தன.
ரூ.92 லட்சம்
அதனை திறந்து காட்ட சொன்ன போது சாவிகள் இல்லை என வாகனத்தில் வந்தவர்கள் கூறினர்.இதனால் சந்தேகமடைந்த பறக்கும் படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அந்த வாகனத்தை கொண்டு வந்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அந்த பணம் கோவில்பட்டி வங்கியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வங்கி மற்றும் சில வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாகவும் அதில் ரூ.92 லட்சம் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சாவிகள் கொண்டு வரப்பட்டது.
திரும்ப ஒப்படைப்பு
அதன்பின்னர் பெட்டிகள் திறக்கப்பட்டு பணத்தை தேர்தல் அதிகாரி முருகன் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். அதில் ரூ.92 லட்சம் இருந்தது. இதை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இருந்ததால் வங்கி அதிகாரி வாகனத்துடன் பணத்தை எடுத்து செல்ல தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.
உரிய ஆவணங்கள் இருந்தும் சாவி இல்லாததால் சந்தேகத்தினால் ரூ.92 லட்சம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story