வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை


செங்குட்டுவேல்
x
செங்குட்டுவேல்
தினத்தந்தி 25 March 2021 8:34 PM GMT (Updated: 25 March 2021 8:34 PM GMT)

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது.

பெரம்பலூர்:

மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல்
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு சங்குப்பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் செங்குட்டுவேல் என்ற கோட்டையன் (வயது 30). இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே, நாவல்மரத்தெருவில் உள்ள பழைய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் செங்குட்டுவேலை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்ட பாய்ந்தது. செங்குட்டுவேலுக்கு அருகே நின்ற சங்குபேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் விக்னேஷ் என்ற குலுக்கி (20), ஆலம்பாடி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்த நவாத் பாஷா மகன் முகமது மாலிக் (24) ஆகியோர் அதை கண்டு சுதாரித்து, அந்த கும்பலை தடுக்க முயன்றனர். இதனால் அந்த கும்பல் அவர்களை வெட்டியதில் 2 பேரும் படுகாயமடைந்தனர்.
வெட்டிக்கொலை
இதையடுத்து அந்த கும்பல் செங்குட்டுவேலை அரிவாளால் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதில் செங்குட்டுவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த விக்னேஷ், முகமது மாலிக் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செங்குட்டுவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கும், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலையான செங்குட்டுவேல் கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். அந்த வழக்கு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக அவரது கூட்டாளிகளே சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, செங்குட்டுவேலை வெட்டிக்கொலை செய்த மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
மேலும் கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story