பெட்டி கடைக்காரர்- தொழிலாளி படுகொலை


பெட்டி கடைக்காரர்- தொழிலாளி படுகொலை
x
தினத்தந்தி 26 March 2021 2:06 AM IST (Updated: 26 March 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு சம்பவங்களில் பெட்டி கடைக்காரர் மற்றும் கட்டிட தொழிலாளி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

மதுரை,மார்ச்
இருவேறு சம்பவங்களில் பெட்டி கடைக்காரர் மற்றும் கட்டிட தொழிலாளி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். 
பெட்டிகடைக்காரர்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 69). இவர் வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பத்மா தியேட்டர் எதிரே உள்ள கற்பக நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் தங்கப்பாண்டியை தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே தங்கப்பாண்டி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் தங்க பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு மதுரை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத், உதவி கமிஷனர் சண்முகம் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது வழிப்பறி சம்பவத்தின் போது நடந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட தங்கப்பாண்டிக்கு சிவக்குமார், பழனிக்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களிடமும் கொலை குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நிலையூர்
திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் நரசிம்மன் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நந்தினி குமார் (வயது 34) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டிட சாமான்களை எடுக்க சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து நந்தினிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையுண்ட நந்தினிகுமாருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், கைக்குழந்தையும் உள்ளனர்.

Next Story