ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்படும்


ஆதிகேசவ பெருமாள் கோவில்  கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்படும்
x
தினத்தந்தி 26 March 2021 2:14 AM IST (Updated: 26 March 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை, மார்ச்.26-
சென்னையை சேர்ந்த ஜெகநாத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. மேலும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட பல சொத்துகள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலில் பல வகையான அரியவகை சிற்பங்கள் மற்றும் பழங்காலத்து பொருட்கள் உள்ளன. இவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை. எனவே ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். கோவிலில் திருப்பணிகளை விரைவாக முடித்து, ஆகம விதிகளின்படி கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதிகேசவ பெருமாள் கோவில் சார்பில் ஆஜரான வக்கீல் சத்யசிங், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் முடிக்கப்பட்ட உடன், கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். வழக்கை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story