கொரோனா பரவல் அதிகரிப்பு; கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது
கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
நெல்லை, மார்ச்:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து நெல்லையில் கோவில்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நெல்லையப்பர் கோவில்
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவி உலகையே அச்சுறுத்தியது. இதையொட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் வெளியே வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்தனர்.
மீண்டும் பரவல்
இந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை அமல்படுத்தி உள்ளது.
கோவில்களில் கட்டுப்பாடு
கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறியும் வகையில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் நேற்று ஊழியர்கள் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதித்தனர். மேலும் பக்தர்களை குறிப்பிட்ட இடைவெளியுடன் தரிசனத்துக்கு அனுமதித்தனர். மேலும் அங்குள்ள அலுவலகம் மற்றும் பக்தர்கள் வந்து செல்லும் பாதையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதே போல் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story