திருச்சியில் நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் தனியாக செல்பவர்களை தாக்கி பணம், செல்போனை பறிக்கும் மர்ம கும்பல்
திருச்சியில் நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் தனியாக செல்பவர்களை தாக்கி பணம், செல்போனை மர்ம கும்பல் பறித்து செல்கிறார்கள். தொடர்ச்சியாக நடைபெறும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருச்சி,
திருச்சியில் நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் தனியாக செல்பவர்களை தாக்கி பணம், செல்போனை மர்ம கும்பல் பறித்து செல்கிறார்கள். தொடர்ச்சியாக நடைபெறும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருச்சியில் வழிப்பறி
திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை நேரங்கள் வரை சாலைகளில் தனியாக செல்பவர்களை வழிமறித்து பணம், செல்போனை பறித்து செல்கிறார்கள். பணம், செல்போனை தர மறுத்தால், அவர்களை சரமாரியாக அடித்து உதைக்கிறார்கள். 2 அல்லது அதற்கும் மேற்பட்ட வாலிபர்கள் கூட்டாக இணைந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.
குறிப்பாக அதிகாலை நேரத்தில் மார்க்கெட்டுக்கு செல்லும் வியாபாரிகள், டீக்கடை, மளிகைக்கடை என அன்றாட பிழைப்புக்கு அதிகாலையில் செல்பவர்களை நோட்டமிட்டு பணத்தை பறிக்கும் நோக்கத்துடன் தாக்குகிறார்கள். இவ்வாறு வழிப்பறி செய்பவர்களிடம் இருந்து ஒரு சிலர் சுதாரித்து கொண்டு மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று தப்பி விடுகிறார்கள். ஆனால் நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் இந்த கும்பலிடம் இருந்து தப்பிப்பது கடினமாக இருக்கிறது.
இளைஞர் மீது தாக்குதல்
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருச்சி பீமநகர் ஹீபர்ரோட்டில் கண்ணன் என்பவரை 3 பேர் கடுமையாக தாக்கி அவரது செல்போன், ரூ.1,000 மற்றும் ஆதார்கார்டை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் புகார் தர சென்றபோது, அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கனவே சில நிமிடங்களுக்கு முன்பு 2 பேரிடம் இதேபோல் செல்போன்கள் பறிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்தநிலையில் மேலும் ஒரு சம்பவமாக, திருச்சி குட்ஷெட் மேம்பாலம் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஒரு இளைஞர் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த இளைஞரை குட்ஷெட் மேம்பாலத்தில் இருந்து முதலியார்சத்திரம் இறக்கத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்தனர். அவர்கள் அந்த இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டினர். உடனே அவர் தன்னிடம் இருந்த 10 ரூபாய் நாணயங்களை காண்பித்துள்ளார்.
அதை கண்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் ரூபாய் நோட்டுகள் இல்லாமல் எதற்கு வருகிறாய்? என கேட்டு முகத்தில் ஓங்கி குத்தியதோடு, மிதித்து கீழே தள்ளினர். இதில் அவர் சைக்கிளுடன் தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அந்த இளைஞர் அவர்கள் பிடியில் இருந்து தப்பி சென்றார். இதேபோல் நேற்று முன்தினம் பீமநகரில் இருந்து ஆழ்வார்த்தோப்பு செல்லும் சிறிய பாலம் அருகேயும் வழிப்பறியில் ஈடுபட 3 பேர் முயன்றுள்ளனர்.
இரவு ரோந்து போலீசார்
திருச்சி மாநகரத்தில் இரவுநேரங்களில் ரோந்து போலீசார் அவ்வப்போது பல்வேறு பகுதிகளிலும் விடிய, விடிய ரோந்து பணி மேற்கொள்வார்கள். நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும்படி சுற்றி திரியும் இளைஞர்களை பிடித்து விசாரிப்பதுடன், விரல்ரேகைகளை பதிவு செய்வார்கள். அப்போது அந்த நபர்களுக்கு ஏற்கனவே ஏதாவது குற்ற சம்பவங்களில் வழக்கு இருந்தால் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்துவார்கள்.
தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வழிப்பறி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். ஆகவே இரவுப்பணியில் உள்ள போலீசார் நள்ளிரவு முதல் அதிகாலை நேரம் வரை கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களை தாக்கி பணத்தை பறிக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story