சென்னிமலையில் பரிதாபம் லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளிக்கூட மாணவி சாவு- தாத்தா படுகாயம்; மொபட்டில் சென்ற போது விபத்து
சென்னிமலையில் நடந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பள்ளிக்கூட மாணவி பரிதாபமாக இறந்தார். அவருடைய தாத்தா படுகாயம் அடைந்தார்.
சென்னிமலை
சென்னிமலையில் நடந்த விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பள்ளிக்கூட மாணவி பரிதாபமாக இறந்தார். அவருடைய தாத்தா படுகாயம் அடைந்தார்.
மாணவி
திருப்பூர் மாவட்டம் பாப்பினி பகுதியை சேர்ந்தவர் மணி. கடந்த ஆண்டு இறந்து விட்டார். இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுடைய மகள் மஞ்சு என்கிற பெரியநாயகி (வயது 17). காங்கேயம் அருகே உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் மஞ்சு 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை மஞ்சுவும், அவருடைய தாத்தா பொன்னுசாமியும் (67) ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மொபட்டில் சென்றனர்.
சாவு
மொபட்டை பொன்னுசாமி ஓட்டினார். மஞ்சு பின்னால் உட்கார்ந்திருந்தார். சென்னிமலையில் உள்ள தெற்கு ராஜ வீதியில் சென்று கொண்டு இருந்தபோது பின்னால் பெருந்துறை நோக்கி கிரசர் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மஞ்சு பரிதாபமாக இறந்தார். பொன்னுசாமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். தன் கால் சிதைந்த நிலையிலும் இறந்து கிடந்த பேத்தியின் கன்னத்தை தடவி பொன்னுசாமி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
கைது
விபத்தை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பொன்னுசாமியை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீசார் விரைந்து சென்று மஞ்சுவின் உடலை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான பவானி அருகே உள்ள வைரமங்கலத்தை சேர்ந்த குமார் (30) என்பவரை கைது செய்தனர்.
விதிகளை மீறி...
இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சென்னிமலை வழியாக அதிக பாரம் ஏற்றி அதிவேகத்தில் செல்லும் டிப்பர் லாரிகள் மற்றும் மினி லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விதிகளை மீறி செல்லும் லாரிகள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
Related Tags :
Next Story