எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 26 March 2021 5:23 AM IST (Updated: 26 March 2021 5:23 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் நல்லாட்சி தொடர வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார். நேற்று மலையடிப்பட்டி, சின்னசுரக்காய்பட்டி, மடத்துப்பட்டி, மதுரைராஜா டீக் கடை உட்பட பகுதிகளில் பல்வேறு சமுதாயத் தலைவர்களையும் பொது மக்களையும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் .

தொடர்ந்து இனாம்செட்டிகுளம், கே. தொட்டியபட்டி, முத்துராமலிங்கபுரம், கொத்தங்குளம், அரசியார்பட்டி, கலங்கபேரி, கம்மாபட்டி உட்பட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர் பேசும்போது, தமிழக முதல்வர் எடப்பாடியார், அண்ணன் ஓபி.எஸ். தலைமையில் நல்லாட்சி மீண்டும் தொடர வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். மத்தியில் மோடி தலைமையிலும் தமிழகத்தில் எடப்பாடியார், பன்னீர்செல்வம் தலைமையிலும் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனக்கு ஒரு உதவி செய்தால் திருப்பி நான் 10 உதவி செய்தால்தான் என்மனது திருப்தி அடையும். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

ராஜபாளையம் தொகுதியில் வரலாற்று திட்டங்களை கொண்டு வந்தேன் என்ற வகையில் எனது பணிகள் இருக்கும். ராஜபாளையத்தில் தங்கிதான் மக்கள் பணி ஆற்றுவேன். எனக்கு இங்கு தோட்டம், வீடு உள்ளது. இங்கேநான் குடியேற வேண்டும் என்பது ஆண்டவனுடைய உத்தரவு. ஆகையால் இங்கேயேதான் குடியிருப்பேன். வெறும் வாயால் வெற்று அறிவிப்புகளை நான் சொல்லமாட்டேன். சொன்னதை செய்து காட்டுவேன் என மனச்சாட்சிக்கு விரோதமான எந்தச் செயலையும் செய்ய மாட்டேன்.

2011-ல் சேத்தூரில் பூமிபூஜை போட்டு நான் தொடங்கி வைத்த கூட்டுக்குடிநீர் திட்டத்தை இப்போதுள்ள தி.மு.க. எம்எல்ஏ நான்தான் கொண்டு வந்தேன் என்று கூறுகின்றார்.

சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் என ராஜபாளையம் தொகுதிக்கு கடந்த 10ஆண்டுகளில் ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை நான்தான் கொண்டு வந்துள்ளேன்.

அ.தி.மு.க. அரசினால்தான் ராஜபாளையம் தொகுதிக்கு திட்டங்கள் கிடைத்துள்ளது. உரிய முறையில் விண்ணப்பிக்காததால் முதியோர் பென்சன் சிலருக்கு கிடைக்கவில்லை. ஆகையால் நான் ஒவ்வொறு பகுதியாக முகாம்

போட்டு மனு வாங்கி தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதியோர் பென்சன் வாங்கி கொடுப்பேன்.

2006-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஏக்கர் நிலம் தறுவோம் என்று தி.மு.க.வினர் கூறினார்கள். ஒருவருக்குக் கூட அரைசென்டு இடம் கூட யாருக்கும் கொடுக்கவில்லை.

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கே.டி.ராஜேந்திரபாலாஜி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று பேசினார். பிரசாரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story