திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கான அரசின் திட்டங்கள் தொடர பாடுபடுவேன்; அ.தி.மு.க. வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் உறுதி


அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது
x
அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது
தினத்தந்தி 26 March 2021 8:00 AM IST (Updated: 26 March 2021 7:59 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் நேற்று தனது தொகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதில் 26-வது வார்டுக்கு உட்பட்ட முதலியார் சத்திரம், பெல்ஸ் கிரவுண்ட், காஜா பேட்டை, முடுக்குப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவர் வீதி, வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அரசின் தற்போதைய நலத்திட்டங்கள் தொடரவும், அ.தி.மு.க. அறிவித்துள்ள குல விளக்கு திட்டம் மூலம் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,500, வருடத்திற்கு 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர்கள், வீடுதோறும் அம்மா வாஷிங் மெஷின், கல்விக்கடன், மகளிர் சுயஉதவிக்கடன் தள்ளுபடி, வீடுதோறும் இலவச கேபிள் இணைப்பு, அரசு வேலைகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதம், மகளிருக்கு பஸ் கட்டணத்தில் 50 சதவீத கட்டண சலுகை, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.25 ஆயிரம் மானிய விலையில் எம்.ஜி.ஆர். பசுமை ஆட்டோ, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 உழவு மானியம் உள்ளிட்ட அரசு புதிதாக அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் கிடைக்க பாடுபடுவேன். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மக்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்க செய்வேன். நான் இங்கேயே வசிப்பதால் தொகுதியில் ஏதாவது பிரச்சினை என்றால் அந்தந்த பகுதியில் 
உள்ளவர்கள் மூலம் உடனே அறிந்து, நீங்கள் வந்து என்னிடம் முறையிடுவதற்கு முன்பே அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சியையும் எடுப்பேன் என்று பேசினார்.

அவருடன் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், சுரேஷ்குப்தா, ஏர்போர்ட் விஜி, எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், வெல்லமண்டி ஜவகர்லால் நேரு, வட்ட செயலாளர்கள் சுந்தரவடிவேல், மலையப்பன், மகாலட்சுமி உள்ளிட்ட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Next Story