திருவெறும்பூர் தொகுதியில் நிறைவேற்றப்படும் 25 திட்டங்கள்: ரூ.20 பத்திரத்தில் உறுதி மொழி அளித்து ம.நீ.ம. வேட்பாளர் முருகானந்தம் பிரசாரம்


திருவெறும்பூர் தொகுதியில் நிறைவேற்றப்படும் 25 திட்டங்கள்: ரூ.20 பத்திரத்தில் உறுதி மொழி அளித்து ம.நீ.ம. வேட்பாளர் முருகானந்தம் பிரசாரம்
x
தினத்தந்தி 26 March 2021 8:30 AM IST (Updated: 26 March 2021 8:27 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் எம்.முருகானந்தம் திருவெறும்பூர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது தான் வெற்றி பெற்றால், திருவெறும்பூர் தொகுதியில் செயல்படுத்த உள்ள 25 திட்டங்களை பட்டியல் போட்டு ரூ.20 பத்திரத்தில் உறுதி மொழி அளித்துள்ளார். தான் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

தொகுதியில் 5 கிலோ மீட்டர் இடைவெளியில் பொதுக்கழிப்பிடம் அமைத்தல், பாதாள சாக்கடை சீரமைப்பு, தடையில்லா மின்சாரம், பஸ் வசதி, நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள துவாக்குடி சாலைக்கு தீர்வு காணப்படும். பட்டா வழங்காமல் இருக்கும் வீடுகளுக்கு பட்டா, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஈமச்சடங்கிற்கு ரூ.5,000 நிதியுதவி, 24 மணி நேரமும் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையம், 3 ஆண்டுகளில் 50 படுக்கைகளுடன் மினி மருத்துவமனை, தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, நாப்கின் அழிப்பு எந்திர வசதி, நூலகங்கள் 
சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் ஆகியவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2 ஆண்டுகளுக்குள் 25 வயதுக்குட்பட்ட 2 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள், மாற்றுத்திறனாளி திறன் மேம்பாட்டு மையங்கள், தொகுதிக்கு என தனி வேலைவாய்ப்பு மையம் மற்றும் திருச்சியில் என்ஜினியரிங் எக்ஸ்போர்ட் எக்சல்லெண்ட் சென்டர் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நவல்பட்டு பகுதியில் தொழில் பூங்கா மற்றும் வியாபாரிகள் தொழில் முனைவோருக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் மையம், உய்யகொண்டான் வாய்க்கால் தூர்வாரப்பட்டு அதனை சுற்றியுள்ள 32 ஆயிரத்து 742 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்படும். 42 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரியமங்கலம் குப்பை கிடங்கு அகற்றப்பட்டு 
வேஸ்ட் ஹீட் ரெகவரி பாய்லர் மூலம் மின்சாரம் தயாரித்து திருவெறும்பூர் தொகுதியை கிரீன் கிளீன் ஆக்குதல் மற்றும் கருவேல மரங்களை அகற்றி இயற்கை வளங்களை காத்து பறவைகள் சரணாலயம் அமைத்து சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க சுற்றுலா தளங்களும் அமைக்க முயற்சி எடுக்கப்படும். அனைத்து பஞ்சாயத்திலும் உடற்பயிற்சி கூடம் அமைத்தல், திருவெறும்பூர் தமிழர் திருவிழா என்ற பெயரில் ஆண்டுதோறும் தமிழர் கலாசாரங்களையும் பாரம்பரிய விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் வகையில் திருவிழா நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து வாக்கு 
சேகரித்தார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story