பச்சைமலையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்; துறையூர் தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின்குமார் உறுதி
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சைமலையில் உள்ள மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்களில் துறையூர் (தனி) தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று பச்சைமலையில் உள்ள மணலோடை கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது மலைவாழ் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் ஸ்டாலின்குமாரை உற்சாகமாக வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அவர் மலைவாழ் மக்களிடையே பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக மலைவாழ் மக்களுக்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களை எடுத்து கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தார்ச்சாலை, நடமாடும் ரேஷன் கடைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்து கொடுத்து உள்ளேன். தற்போது மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச்செய்தால் மலைவாழ் மக்களுக்கு தேவையான முந்திரி தொழிற்சாலை, மரவள்ளி கிழங்கு எடை மேடை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் மக்களின் நலன்கருதி பச்சைமலையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன். மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் பெற மனு கொடுத்த நூறு நாட்களில் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன், என்று உறுதி அளித்தார்.
பிரசாரத்தின்போது மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிட்டப்பா, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story