நன்னிலம் தொகுதி மக்களின் உரிமை குரலாக ஒலிப்பேன்; வலங்கைமானில் அமைச்சர் காமராஜ் பிரசாரம்


நன்னிலம் தொகுதி மக்களின் உரிமை குரலாக ஒலிப்பேன்; வலங்கைமானில் அமைச்சர் காமராஜ் பிரசாரம்
x
தினத்தந்தி 26 March 2021 9:00 AM IST (Updated: 26 March 2021 9:01 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் தொகுதி மக்களின் உரிமை குரலாக ஒலிப்பேன் என்று வலங்கைமானில் அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்தார்.

தேர்தல் பிரசாரம் 
நன்னிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நன்னிலம் தொகுதிக்குட்பட்ட வலங்கைமான் ஒன்றியத்தில் 83 ரெகுநாதபுரம், அவளிவநல்லூர், கிளியூர், முனியூர், மணக்கால், வீரமங்களம், வேலங்குடி, வீராணம், களத்தூர், விளத்தூர், அரித்துவாரமங்கலம், மருவத்தூர், தெற்கு பட்டம், வடக்கு பட்டம், 44ரகுநாதபுரம் ஆகிய இடங்களில் வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.  

அவளிவநல்லூரில் தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-

நன்னிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறேன். கடந்த 2 முறை என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினீர்கள். 

அங்கீகாரம் 
முதல் முறை போட்டியிட்டபோது 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். இரண்டாவது முறை போட்டியிட்டபோது 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து என்னுடைய அரசியல் பணிக்கும், மக்கள் பணிக்கும் அங்கீகாரம் அளித்தீர்கள். இப்போது 3-வது முறை உங்களிடத்தில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் என்னை வெற்றி பெற செய்யும். நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது எனக்காக பிரார்த்தனை செய்து என்னுடைய உயிரை காப்பாற்றினீர்கள். 

உரிமை குரலாக ஒலிக்கும்
அரசியலில் எனக்கு அங்கீகாரம் அளித்தது போல் பிரார்த்தனை மூலம் எனக்கு வாழ்நாள் அதிகாரமும் வழங்கியுள்ளீர்கள். அதற்காக என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக பணி செய்வேன். உங்களுடைய உரிமைகுரலாக என்றென்றும் ஒலிப்பேன். கடந்த 10 ஆண்டுகளில் உங்களுடைய இன்ப துன்பங்களில் பங்கேற்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உங்கள் சகோதரனாக நான் பணியாற்றி உள்ளேன். கொரோனா காலமாக இருந்தாலும் சரி, மழை, புயல் காலமாக இருந்தாலும் சரி உங்களுக்காக உழைக்கும் மக்கள் பணியே எனது முதன்மையான பணியாக இருந்தது. தேர்தல் பிரசாரத்திற்கு வந்துள்ள என்னை அவளிவநல்லூர் ஊராட்சி மக்கள் திரண்டு வந்து வரவேற்று இருக்கிறீர்கள். 

இரட்டை இலை சின்னம்
என்னை வெற்றி பெற செய்வோம் என உறுதி கூறுகிறீர்கள். நான் என்றென்றும் உங்கள் வீட்டு பிள்ளையாகவே இருப்பேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது என்றும் மாறாத அன்பை கொண்டுள்ள நீங்கள், இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இந்த முறை என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story