மணப்பாறை தொகுதி அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்; வேட்பாளர் சந்திரசேகர் பேச்சு
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சந்திரசேகர் எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிடுகிறார்.
தற்போது அவர், கட்சி நிர்வாகிகளுடன் மணப்பாறை தொகுதியில் கிராமம், கிராமமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி மருங்காபுரி ஒன்றியத்தில் அதிகாரம், தெத்தூர் உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் நேற்று ஆர்.சந்திரசேகர் எம்.எல்.ஏ. தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசாரத்தின் போது, ஆர்.சந்திரசேகர் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
அ.தி.மு.க. கோட்டை
மணப்பாறை தொகுதி என்பது அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டை. திருச்சி மாவட்டத்திலேயே அதிக அளவிலான மக்கள் நலத்திட்டங்கள் மணப்பாறை தொகுதியில் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2,500 அ.தி.மு.க. அரசு வழங்கி உள்ளது. இதுமட்டுமல்ல கொரோனா காலங்களில் பல்வேறு விதமான மக்களுக்கும் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அரசு மக்கள் நலனில் அக்கரை கொண்ட அரசாக தொடர்ந்து எப்போதும் இருக்கும். இருப்பினும் சிலர் செய்யும் விஷம பிரசாரங்கள் ஒருபோதும் மக்கள் மத்தியில் எடுபடாது. இந்தமுறையும் மக்கள் மகத்தான வெற்றியை வழங்க வேண்டும். அதற்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மணப்பாறை அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க, த.மா.கா. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story