மயிலாடுதுறை புறவழிச்சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்; காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் வாக்குறுதி
மயிலாடுதுறை புறவழிச்சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் உறுதி அளித்தார்.
பாண்டூரில் வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார், பாண்டூர் கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் கூறுகையில், 2006-2011-ம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நகரை சுற்றி புறவழிச்சாலை அமைத்திட மத்திய அரசிடம் இருந்து ரூ. 37 கோடியும், மாநில அரசிடம் இருந்து நில ஆர்ஜிதம் செய்திட ரூ.3 கோடியும் பெற்று தந்தேன்.அப்போது புறவழிச்சாலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும்
பணி நடந்து முடிந்தது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக புறவழிச்சாலை திட்டப்பணியில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் போய்விட்டன.கடந்த 2011 முதல் தற்போது வரை நெடுஞ்சாலைத்துறை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஆனாலும் மயிலாடுதுறை புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
நடவடிக்கை எடுப்பேன்
நான் மீண்டும் எம்.எல்.ஏ., ஆனவுடன் கிடப்பில் போடப்பட்ட அந்த மயிலாடுதுறை புறவழிச்சாலை திட்டத்தை மீண்டும் துரிதமாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பேன். இதேபோல கைவிடப்பட்ட வளர்ச்சி திட்டங்களையும், புதிய வளர்ச்சி பணிகளையும் மயிலாடுதுறை பகுதிக்கு கொண்டுவர பாடுபடுவேன் என்றார்.தொடர்ந்து கொற்கை, தாழஞ்சேரி, ஐவநல்லூர், காளி, நமச்சிவாயபுரம், ஆத்தூர், பூதங்குடி, கடலங்குடி, திருச்சிற்றம்பலம் ஆகிய ஊராட்சிகளில் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவருடன் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ., சத்தியசீலன், வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ், மாவட்ட வக்கீல் அணி நிர்வாகிகள் அருள்தாஸ், தணிகை பழனி, காளிகாந்தி, காங்கிரஸ் வட்டார தலைவர் ராமானுஜம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story