காஞ்சீபுரம் அருகே கால்வாயில் கேட்பாரற்று கிடந்த கோவில் கல்தூண்கள்


காஞ்சீபுரம் அருகே கால்வாயில் கேட்பாரற்று கிடந்த கோவில் கல்தூண்கள்
x
தினத்தந்தி 26 March 2021 5:35 PM IST (Updated: 26 March 2021 5:35 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே கால்வாயில் கேட்பாரற்று கிடந்த கோவில் கல்தூண்களை அறநிலையத்துறையினர் மீட்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் பஞ்சுப்பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள ஒரு கால்வாயில் பழமை வாய்ந்த கோவில் கல் தூண்கள் கேட்பாரற்று கிடப்பதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது.

அவர் உடனடியாக அங்கு சென்று கோவில் கல்தூண்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த கல்தூண்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக வைக்கும்படி அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

காஞ்சீபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன், காஞ்சீபுரம் உதவி ஆணையர் ஜெயா, கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், குமரன், அறநிலையத்துறை ஆய்வாளர் பிருத்திகா மற்றும் பொதுப்பணித்துறை, நகராட்சியினர் அங்கு விரைந்து சென்று கால்வாயில் கிடந்த 6 முதல் 7 அடி உயரம் உள்ள 150-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கோவில் கல்தூண்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோவில் பணியாளர்கள் கிரேன் எந்திரம் உதவியுடன் கல்தூண்களை லாரியில் ஏற்றினர். மீட்கப்பட்ட கல் தூண்கள் காஞ்சீபுரத்தில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

பழமை வாய்ந்த கோவில் கல்தூண்கள் அங்கு எப்படி வந்தது? எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரிக்க அறநிலையத்துறைக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story