சட்டமன்ற தேர்தலில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் விதிமுறைகளை பின்பற்றி கவனமாக பணியாற்ற வேண்டும் தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் பேச்சு
சட்டமன்ற தேர்தலில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் விதிமுறைகளை பின்பற்றி கவனமாக பணியாற்ற வேண்டும் என்று தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
ச்ட்டமன்ற ேதர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் விதிமுறைகளை பின்பற்றி கவனமாக பணியாற்ற வேண்டும், என்று மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் கூறினார்.
பயிற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவதற்காக 10 ஆயிரத்து 66 வாக்குச்சாவடி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே முதல்கட்ட பயிற்சி முடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதே போன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியில் பணியாற்றும் குழுவும் ஒதுக்கப்பட்டது. நேற்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 2-வது கட்டமாக பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்டவர்களுக்கு காமராஜ் கல்லூரியில் பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாக ஆணையர் விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வரவேற்று பேசினார்.
வெளிப்படை தன்மை
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் பேசியதாவது:- இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. அதிக வாக்காளர்களை கொண்ட நாடு. உலகின் பல நாடுகள் இந்தியாவை பார்த்து ஆச்சரியப்படுகின்றன. இதற்கு அடிப்படை நமது ஜனநாயக தேர்தல் முறைதான். அதனை நடத்துவது அரசு ஊழியர்கள். ஆகையால் அரசு ஊழியர்களாக இருப்பதில் பெருமை கொள்ள வேண்டும்.
நல்ல நேர்மையான வெளிப்படை தன்மையுள்ள தேர்தலில் வாக்குசாவடி அலுவலர்களான உங்களின் கடமை மிக அவசியமானது ஆகும். உங்களுக்கு பல சொந்த சிரமங்கள் இருப்பினும் ஜனநாயக கடமையாற்ற வந்து உள்ளீர்கள். தேர்தல் ஆணையத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விதிமுறைகள் தெளிவாக உள்ளது. இந்த விதிமுறைகளை பொறுமையாக தெரிந்து கொண்டு தேர்தல் நடைபெறும் சமயத்தில் அவைகளை கவனமுடன் கையாள வேண்டும். வாக்குசாவடியில் பணியாற்றும் உங்களுக்கு மிகப்பெரிய அதிகாரம் உள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலராக இருந்தாலும் வாக்களிக்க வாக்குசாவடிக்கு வரும் போது உங்கள் அனுமதியோடுதான் வாக்களிக்க முடியும். மாதிரி வாக்குப்பதிவு உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றப்படுவதை முறையாக பதிவு செய்ய வேண்டும். வாக்குசாவடியில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் பொறுப்புகள் உண்டு. பயிற்சியின் போது சொல்லப்படும் விவரங்களை கவனத்துடன் கேட்டு குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கவனமுடன்...
இந்த தேர்தல் கொரோனா காலகட்டத்தில் நடக்கிறது. ஆகையால் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்களிக்கும் முன்பு கையுறை அணிந்து வாக்களிக்க செய்ய வேண்டும். இந்த முறை வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து செல்வதை போலவே வாக்குபதிவின்போது பயன்படுத்தும் கையுறைகளை எடுத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது 2097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
விதிமுறைகளை பின்பற்றி...
நமது மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 66 வாக்குசாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மண்டல அலுவலர்கள், போலீசார், பறக்கும் படையினர் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளார்கள். மேலும் கூடுதலாக காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளும், தன்னார்வலர்களும் என 4 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் நீங்கள் அனைவரும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி கவனத்துடனும், சிறப்பாகவும் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story