ராமநாதபுரம் என்ஜினீயரிடம் ரூ.22 ஆயிரம் மோசடி
தொழில் தொடங்க கடன் தருவதாக கூறி ராமநாதபுரம் என்ஜினீயரிடம் ரூ.22 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்,
தொழில் தொடங்க கடன் தருவதாக கூறி ராமநாதபுரம் என்ஜினீயரிடம் ரூ.22 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொழில் கடன்
ராமநாதபுரம் வடக்கு தைபிரியன் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் முத்துப்பாண்டி (வயது32). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். தொழில்தொடங்க கடன் தருவதாக வந்த தகவலை அறிந்து அந்த எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளார்.
அப்போது அவரிடம் பேசிய லட்சுமிகாந்த் மற்றும் சூர்யா உள்ளிட்டோர் தொழில் தொடங்க தேவையான அளவு கடன் தருவதாகவும் அதற்கு வைப்புத்தொகையாக ரூ.5 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய முத்துப்பாண்டி கூகுள்பே மூலம் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.5 ஆயிரத்து 500 செலுத்தி உள்ளார்.
இதன்பின்னர் அவர்கள் கடன் தராததால் அதுகுறித்து கேட்டபோது மனு பரிசீலணையில் உள்ளதாகவும் அதனை முழுமையாக நடைமுறைபடுத்த செயல்முறை கட்டணம் ரூ.16 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வழக்குப்பதிவு
இதனால் எப்படியாவது கடன் பெற வேண்டும் என்ற ஆவலில் இருந்த முத்துப்பாண்டி வங்கி மூலம் நேரடியாக அந்த வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளார். அதன்பின்னர் தனது கடன் தொகை குறித்து கேட்க தொடர்பு கொண்டபோது அனைவரின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துப்பாண்டி ரூ.22 ஆயிரம் மோசடி குறித்து தன்னிடம் பேசிய 3 நபர்களின் விவரங்களுடன் இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story