திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.50ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரெயில், பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் ரெயில், பஸ் சேவை தொடங்கியது. கொரோனா நோயாளிகளை கண்டறிய ரெயில் நிலையங்களில் தானியங்கி கருவி மூலம் பயணிகளின் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.
அதேநேரம் பெரும்பாலான ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ரெயில் பயணிகளுடன் வருவோருக்கு அனுமதி இல்லை. இதற்காக பிளாட்பாரம் டிக்கெட் வழங்குவதும் நிறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கடந்த ஓராண்டாக பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படவில்லை. மேலும் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று முதல் பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆனால், கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக பயணிகள் மட்டுமே ரெயில் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், முதியோர், பெண்களை ரெயிலில் அனுப்புவதற்கு உறவினர்கள் வருகின்றனர். அவர்களை அனுமதிக்க ரூ.50-க்கு பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகரிக்காது, என்றார்.
Related Tags :
Next Story