கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் கல்லூரி அணி சாம்பியன்
மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
திண்டுக்கல்:
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அணிகளுக்கு இடையே மண்டல அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் மதுரை, தேனி, சிவகங்கை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின.
நாக்-அவுட் மற்றும் அரையிறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.-விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. பின்னர் நடந்த இறுதிப்போட்டியில், முதலாவதாக பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக கண்ணன் 53 ரன்னும், அழகு கவுசிக் 37 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய விருதுநகர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பின்னர் வெற்றிபெற்ற அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. இதனை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆர்.எஸ்.கே.ரகுராம் வழங்கினார். இதில் செயலாளர் வெங்கட்ராமன், இணைசெயலாளர் மகேந்திரகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story