குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் விஜய் வசந்த், பிரின்ஸ் தீவிர வாக்கு சேகரிப்பு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள்
குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் விஜய் வசந்த், பிரின்ஸ் ஆகியோர் கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
திங்கள்சந்தை,
குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் குளச்சல் சட்டசபை தொகுதியில் பிரின்ஸ், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் விஜய் வசந்தும் போட்டியிடுகின்றனர். இதையோட்டி இருவரும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளரான விஜய்வசந்த், குளச்சல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரின்சுடன் இணைந்து நேற்று குருந்தன்கோடு பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினர்.
வாகன பிரச்சாரத்தை குளச்சல் தொகுதி வேட்பாளர் பிரின்ஸ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆளூர் பகுதியில் ஒரு கோடி ரூபாய் செலவில் ரெயில்வே பாலம் அமைக்கப்படும். மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 5 அடி உயர்த்தி கட்டப்படும். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு எனது பணிகள் தொடரும். குருந்தன்கோட்டில் சித்த மருத்துவமனை புனரமைத்து மேம்படுத்தப்படும். மேலும், அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குளச்சல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைப்பது எனது முதல் பணியாக இருக்கும். ரேஷன் கடைகளில் ஒரே வகையான ரேஷன் கார்டு வழங்கப்படுவதுடன் தங்கு தடையின்றி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தந்தையின் பணியை தொடர...
தொடர்ந்து நாடாளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் பிரசாரத்தின் போது கூறியதாவது:-
எனது தந்தை விட்டுச் சென்ற பணிகளை தொடர ஒரு வாய்ப்பு தாருங்கள். மதவாதம் ஒழிக்கப்படவேண்டும். குளச்சல் தொகுதி மக்களின் கோரிக்கைகளை தொகுதி எம்.எல்.ஏ. உடன் இணைந்து தீர்க்க பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர்கள், குருந்தன்கோடு, கட்டி மாங்கோடு கக்கோட்டுதலை, ஆளூர், வில்லுக்குறி மற்றும் வெள்ளிமலை, வெள்ளிச்சந்தை, நெட்டாங்கோடு ஆகிய பஞ்சாயத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தனர்.
அவர்கள் வாக்கு கேட் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது விஜய் வசந்த், குமரி மாவட்ட மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல் இருக்கும். உங்களது தேவைகள் அறிந்து அதனை நிறைவேற்றி தர எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். எனது தந்தைக்கு அளித்த வெற்றி போன்று என்னையும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
Related Tags :
Next Story