சிற்றாறு பட்டணங்கால்வாய் முழுமையாக சீரமைக்கப்படும் எனவும் ராஜேஷ்குமார் பிரசாரம்


சிற்றாறு பட்டணங்கால்வாய் முழுமையாக சீரமைக்கப்படும் எனவும் ராஜேஷ்குமார் பிரசாரம்
x
தினத்தந்தி 27 March 2021 12:00 PM IST (Updated: 26 March 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றும், சிற்றாறு பட்டணங்கால்வாய் முழுமையாக சீரமைக்கப்படும் எனவும் ராஜேஷ்குமார் பிரசாரம் செய்தார்.

கருங்கல், 

கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கை சின்னத்துக்கு தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் குடும்பத்துடன் திரண்டு நின்று ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகி்ன்றனர்.

நேற்று கருங்கல் ராஜீவ் ஜங்ஷனில் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ராேஜஷ்குமார் பிரசாரத்தை தொடங்கினார். பல்வேறு கிராமங்களில் அவர் பிரசாரம் செய்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

பிரசாரத்தின் போது வேட்பாளர் ராஜேஷ்குமார் தான் வெற்றி பெற்றவுடன் தொகுதி மக்களுக்கு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை, எளிய மக்கள் ஏராளமானவர்களுக்கு ரேஷன் கார்டில் என்.பி.எச்.எச். கார்டு (முன்னுரிமை இல்லாத ரேஷன் கார்டு) வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வசதியானவர்களுக்கு பி.எச்.எச். கார்டு (முன்னுரிமை கார்டு) வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. நான் வெற்றி பெற்றவுடன் ரேஷன் கார்டு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் உள்ள இடையூறுகளை சரி செய்து அவரவர் தகுதிக்கு ஏற்ப ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
கிள்ளியூர் தொகுதியில் கடலோர கிராமங்கள் உள்பட பல்வேறு கிராமங்களில் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். அவர்களது ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய கால்பந்து விளையாட்டு மைதானம் ஒன்று கொண்டு வரப்படும். அதன்மூலம் கிள்ளியூர் தொகுதி இளைஞர்கள் சர்வதேச கால்பந்து விளையாட்டு வீரர்களாக உருவாக முடியும்.

ஏழை எளிய இளைஞர்கள் தங்களது படிப்புக்காக வாங்கிய கல்வி கடன் ரத்து செய்யப்படும். கருங்கல் பஸ் நிலையம் நவீன பஸ் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிற்றாறு பட்டணங்கால்வாயில் பல்வேறு இடங்களில் ஷட்டர்கள் பழுதாகி கிடக்கிறது. அதனை முழுமையாக சீரமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். ஏ.வி.எம்.கால்வாய் தூர்வாரி சீரமைக்கப்படும்.
இவ்வாறு ராஜேஷ்குமார் பேசினார்.

இதுதவிர பாலூர் பகுதியில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தப்படும். ஆகவே நீங்கள் கிள்ளியூர் தொகுதி வேட்பாளரான எனக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளரான விஜய் வசந்துக்கும் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Next Story