சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து கே.வி.தங்கபாலு பிரசாரம்
சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பிரசாரம் மேற்கொண்டார்.
சாத்தான்குளம்,
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று சாத்தான்குளம் அருகே முதலூரில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து கடாட்சபுரம், ஆத்திகாடு, நரையன்குடியிருப்பு, அடைக்கலாபுரம், மணிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். மேலும் பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தின்போது கே.வி.தங்கபாலு கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலானது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிற தேர்தலாகும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் சுயமரியாதையை இழந்தும், நல்ல எதிர்காலத்தை இழந்தும், மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்க்கும் சக்தி அ.தி.மு.க.வுக்கு இல்லை. மத்திய அரசை எதிர்கொள்ளும் துணிவு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் இல்லை.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான அரசாக உள்ளது. இதனை காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இன்னும் 2 மாதத்தில் தமிழகத்தில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். அவரது தலைமையில் நல்லாட்சி அமைய போவது உறுதி. அந்த நல்லாட்சி அமைவதற்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுகின்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ஊர்வசி அமிர்தராஜ் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்துவார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை நிறைேவற்றுவார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க தொழில் கூடங்களை கொண்டு வருவார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார். என்றும் மக்களோடு மக்களாக இருந்து உழைப்பார். எனவே ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜிக்கு கை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் வக்கீல் பிரிவு இணை தலைவர் மகேந்திரன், மாவட்ட துணை தலைவர் சங்கர், வட்டார தலைவர்கள் லூர்து மணி, சக்திவேல் முருகன், பார்த்தசாரதி, பிச்சிவிளை சுதாகர், நகர துணை தலைவர் கதிர்வேல், ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, மாவட்ட பொருளாளர் எடிசன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, பசுபதி, ஒன்றிய செயலாளர்கள் ஜோசப், பாலமுருகன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பலவேச பாண்டியன், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் மகாராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக சாத்தான்குளம் அருகே தைலாபுரம், பிடானேரி, டி.கே.சி.நகர், சமத்துவபுரம், தேரிப்பனை, அச்சம்பாடு, தோப்பூர், எழுவரைமுக்கி, வாலிவிளை, சடையன் கிணறு, ஆனந்தபுரம், பழங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான் மாணிக்கம், செட்டிகுளம், கொம்பன்குளம், இரட்டைக்கிணறு சொக்கலிங்கபுரம், தஞ்சை நகரம், பண்டாரபுரம் உள்ளிட்ட கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
விரைவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைந்ததும், சாத்தான்குளம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். சாத்தான்குளம் பகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து, தொழில்வளம் பெருக நடவடிக்கை மேற்கொள்வேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். நான் என்றும் மக்களுடனே இருந்்து தொண்டாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story