தபால் வாக்குப்பதிவு செய்த வாக்குச்சாவடி அலுவலர்கள்


தபால் வாக்குப்பதிவு செய்த வாக்குச்சாவடி அலுவலர்கள்
x
தினத்தந்தி 26 March 2021 10:19 PM IST (Updated: 26 March 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை சட்டமன்றத்தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்தனர். இதை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

உடுமலை
உடுமலை சட்டமன்றத்தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்தனர். இதை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோர்  ஆய்வு செய்தனர்.
வாக்குச்சாவடி அலுவலர்கள்
உடுமலை சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குச்சாவடிகளும் 87 துணை வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 380 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 18ந்தேதி நடந்த முதல் கட்ட பயிற்சி வகுப்பில் உடுமலை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. 2வது கட்டமாக நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் உடுமலை சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
உடுமலை சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற மொத்தம் 1824 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிற சட்டமன்றத்தொகுதிகளை சேர்ந்தவர்களாகும். இவர்கள் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வாக்குச்சாவடிகளில் என்னென்ன பணிகளைச்செய்யவேண்டும் என்பதற்கான பயிற்சி வகுப்பு உடுமலை பழனிசாலையில் உள்ள ஶ்ரீஜிவி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நடந்தது. பயிற்சி வகுப்புகளை மூத்த மண்டல அலுவலர் திருநாவுக்கரசு உள்ளிட்ட மண்டல அலுவலர்கள் நடத்தினர்.
தபால் வாக்குகள்
உடுமலை சட்டமன்றத்தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்ற திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மற்ற சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு  பயிற்சி வகுப்புகள் நடந்த பகுதியில் தபால் வாக்குச்சீட்டு மற்றும் அதை வைப்பதற்கான கவர் ஆகியவை வழங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்களுக்கும் தபால் வாக்குச்சீட்டுகள், அதை வைப்பதற்கான கவர்கள் ஆகியவை வழங்குவதற்கு தனித்தனியாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் அதை வாங்கிக்கொண்டு இந்த பயிற்சி வகுப்பு நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்றனர். அங்கு  வரிசையில் நின்று சென்று, வாக்குச்சாவடிக்குள் அமைக்கப்பட்டிருந்த மறைவிடத்திற்குச்சென்று தங்களது வாக்கை பதிவு செய்து அந்த கவரை ஒட்டி கொண்டு வந்து, உடுமலை சட்டமன்றத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ.கீதா உடுமலை சட்டமன்றத்தொகுதி தேர்தல் பொறுப்பு அலுவலரான சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் எல்.சிவக்குமாரி ஆகியோர் முன்னிலையில் தபால் வாக்குப்பெட்டியில் போட்டனர். முன்னதாக அந்த வாக்குப்பெட்டி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறந்து காட்டப்பட்டு பிறகு அந்த பெட்டியைபூட்டி பூட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகே தபால் வாக்குப்பதிவு நடந்தது.
 மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதன்படி, இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவக்குழுவினர் தடுப்பூசி போட்டனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்த போது மாவட்ட கலெக்டர் கே.விஜயகார்த்திகேயன் அங்கு வந்தார்.அவர் பயிற்சி வகுப்பு நடந்துகொண்டிருந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அத்துடன்வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகள் குறித்து பேசினார்.
கலெக்டர் பேசிக்கொண்டிருந்தபோது உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதிகளின் தேர்தல் பார்வையாளரான  ஐ.ஏ.எஸ்.அதிகாரி கபில்மீனா அங்கு வந்தார். பயிற்சி வகுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளை உடுமலை சட்டமன்றத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ஆர்.டி.ஓ.கீதா உதவிதேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் வி.ராமலிங்கம் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Next Story