வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு


வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 26 March 2021 10:54 PM IST (Updated: 26 March 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்தனர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்தனர்.
 பயிற்சி
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறை குறித்து 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
தாராபுரம் தொகுதிக்கு மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் 1,676 பேருக்கும், காங்கேயம் தொகுதிக்கு நத்தக்காடையூரில் உள்ள ஈரோடு பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியில் 1,784 பேருக்கும், அவினாசி தொகுதிக்கு சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1924 பேருக்கும், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் 2,568 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
அதே போல் திருப்பூர் தெற்கு தொகுதிக்கு ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி. ஜெய்ஸ்ரீராம் அகாடமி பள்ளியில் 2632 பேருக்கும், உடுமலை தொகுதிக்கு ஸ்ரீவிசாலாட்சி மகளிர் கல்லூரியில் 1824 பேருக்கும், மடத்துக்குளம் தொகுதிக்கு ஆர்.ஜி.எம். மெட்ரிக் பள்ளியில் 1,712 பேருக்கும் என மொத்தம் ரத்து 44 பேருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
தடுப்பூசி கட்டாயம்
உடுமலையில் ஸ்ரீவிசாலாட்சி கல்லூரியிலும், ஆர்.ஜி.எம்.மெட்ரிக் பள்ளியிலும் நடந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். உடுமலை, மடத்துக்குளம் தொகுதி பொது பார்வையாளர் கபில் மீனா உடனிருந்தார்.
கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
தபால் வாக்கு மையம்
பயிற்சி வகுப்பில் அமைக்கப்பட்டு இருந்த கொரோனா தடுப்பூசி மையத்தையும் ஆய்வு செய்தனர். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த தபால் வாக்கு மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி அலுவலர்கள் எந்த தொகுதியில் வாக்கு உள்ளதோ அந்த தொகுதியின் பொறுப்பு அதிகாரிகள் குழுவினர் அந்தந்த பயிற்சி வகுப்பு நடைபெறும் மையத்துக்கு வந்து தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
இதில் உடுமலை தொகுதி தேர்தல் அதிகாரியான ஆர்.டி.ஓ. கீதா, மடத்துக்குளம் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆதிதிராவிடர் நல அதிகாரி ஜெயந்தி, தாசில்தார்கள் ராமலிங்கம்  கனிமொழி  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story