கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக 947 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி


கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு  கூடுதலாக 947 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி
x
தினத்தந்தி 26 March 2021 11:06 PM IST (Updated: 26 March 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதலாக 947 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

1,569 வாக்குச்சாவடி மையங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி(தனி) சட்டமன்ற தொகுதியில் 416 வாக்குச்சாவடி மையம், ரிஷிவந்தியம் தொகுதியில்-374, சங்கராபுரம் தொகுதியில்-372, உளுந்தூர்பேட்டை தொகுதியில்-407 என மொத்தம் 1,569 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 

இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 1,885 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,885 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 2,120 வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கும் சுழற்சி முறையில் தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் வாக்குப்பதிவு எந்திரம்

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில்-17 வேட்பாளர்களும், சங்கராபுரம் தொகுதியில்-19 பேர், ரிஷிவந்தியம் தொகுதியில்-15 பேர், உளுந்தூர்பேட்டை தொகுதியில்-15 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் 15-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்  போட்டியிடுவதால் இந்த தொகுதிகளுக்கு மட்டும் கூடுதலாக 200 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேவைப்பட்டது. இதையடுத்து அரியலூர் மாவட்டத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வரவழைக்கப்பட்டு தச்சூரில் உள்ள வாணிபக்கழக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. 

947 எந்திரங்கள் ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா தலைமை தாங்கினார். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். 

கள்ளக்குறிச்சி தொகுதிக்கு 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 447 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கூடுதலாக 947 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

இதில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரவணன், ராஜவேல், ராஜாமணி, தனி தாசில்தார்(தேர்தல்) பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story