ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 26 March 2021 11:10 PM IST (Updated: 27 March 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை விதித்து நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

கோவை,

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 34). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை அருகில் உள்ள புதருக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கு வந்த அந்த பெண்ணின் தாயார் இதை பார்த்து விட்டு கூச்சல் போட்டார். உடனே சரவணன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து தாயார் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

இதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு 39 வயது என்றும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கூலித் தொழிலாளி சரவணனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறப்பட்டது. 

39 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சரவணனுக்கு 2 பிரிவுகளில் தலா 10 ஆண்டுகளும், ஒரு பிரிவில் 2 ஆண்டும் என மொத்தம் 22 ஆண்டு சிறை தண்டனையை ஏகக்காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி நந்தினிதேவி தீர்ப்புக் கூறினார். 

இதனால் குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தாலே போதும். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரோஜினி ஆஜரானார்.

Next Story