புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் திருக்கல்யாணம்


புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 26 March 2021 11:19 PM IST (Updated: 26 March 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனத்தில் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்புவனம்,

திருப்புவனத்தில் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புஷ்பவனேசுவரர் கோவில்

திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர், கருவூர்த்தேவர் போன்ற சமய புலவர்களால் பாடப்பெற்ற சிறப்பு மிக்க தலம் ஆகும்.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா 11 நாட்கள் நடைபெறும். அது போல் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருக்கல்யாணம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இதையொட்டி புஷ்பவனேசுவரர்- சவுந்தரநாயகி அம்மன் கண்ணூஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்கள்.
அங்கு சுவாமிக்கு மாலை மாற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு சுவாமி -அம்பாள் திருக்கல்யாண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்பு பெருமாள் கோவிலில் இருந்து அழகிய மணவாள ரங்கநாதபெருமாள் திருக்கல்யாண மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பிறகு பாபு பட்டர் தலைமையில் மந்திரங்கள் ஓதப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்கள் தரிசனம்

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர்.
பெண்களுக்கு புதிய மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்புவனம் போலீசார் செய்திருந்தனர்.


Next Story