ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் இரவில் போட்டிகளை நடத்த போதிய வெளிச்சம் கிடைக்கிறதா?
ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் இரவில் போட்டிகளை நடத்த போதிய வெளிச்சம் கிடைக்கிறதா? என்று உயர்கோபுர மின்விளக்குகளை எரியவிட்டு சோதனை நடத்தப்பட்டது.
ஊட்டி,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஊட்டியில் எச்.ஏ.டி.பி. மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் தடகள பயிற்சிகள் மட்டுமின்றி கால்பந்து, டென்னிஸ், கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி எடுக்க தனியாக வசதிகள் உள்ளன.
பள்ளி கல்வித்துறை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடந்து உள்ளது. மேலும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடத்தப்பட்டு இருக்கிறது. எனினும் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தும் வகையில் மைதானத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து 6 லேயர் கொண்ட சிந்தடிக் ஓடுதளம் மற்றும் ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்றவற்றுக்கு தனி தளங்கள் அமைக்கப்பட்டது. அதன் நடுவே கால்பந்து மைதானம் சீரமைக்கப்பட்டு இருக்கிறது.
இங்கு உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. 4 இடங்களில் 38 மீட்டர் உயரம் கொண்ட கோபுரங்கள் அமைத்து, மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. இதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது 4 உயர்கோபுர மின்விளக்குகளும் எரியவிட்டு பார்க்கப்பட்டது. அதன் வெளிச்சம் மைதானம் மட்டுமின்றி அருகே இருந்த குடியிருப்பு பகுதிகளிலும் அதிகமாக இருந்தது.
மைதானத்தில் விளையாட்டு பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்துவதற்கு தேவையான வெளிச்சம் உள்ளதா? என்று நவீன கருவி மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) இரவு சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
எச்.ஏ.டி.பி. மைதானத்தில் விளையாட்டு அமைப்புகள், சங்கங்கள் ஆகியவை தடகள போட்டிகளை அனுமதி பெற்று நடத்தலாம். அவர்கள் தங்களது சொந்த செலவில் 4 உயர்கோபுர மின் விளக்குகளை 2 ஜெனரேட்டர் மூலம் இயக்கி கொள்ளலாம்.
இதன் மூலம் இரவு நேரங்களில் விளையாட போதிய வெளிச்சம் கிடைக்கும்.
ஏற்கனவே வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வந்த வீரர்கள் மலை மேலிட பயிற்சியில் ஈடுபடுகின்றனர். மைதானம் மேம்படுத்தப்பட்டு உள்ளதால் வீரர்கள் பயிற்சி பெற அனைத்து வசதிகளும் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story