இலவசமாக கொடுக்கப்படும் வாசிங் மெஷின் பழுதாகி விட்டால் மீண்டும் தருவார்களா? சீமான் கேள்வி


இலவசமாக கொடுக்கப்படும் வாசிங் மெஷின் பழுதாகி விட்டால் மீண்டும் தருவார்களா?  சீமான் கேள்வி
x
தினத்தந்தி 27 March 2021 1:44 AM IST (Updated: 27 March 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

இலவசமாக கொடுக்கப்படும் வாசிங் மெஷின் பழுதாகி விட்டால் மீண்டும் தருவார்களா? என கரூர் பிரசாரத்தின் போது சீமான் கேள்வி எழுப்பினார்.

கரூர் 
ஆதரவு திரட்டிய சீமான்
 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையாவுக்கு வெங்கமேட்டில் நேற்று ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
 ஏரி, குளம் குட்டை, கண்மாய், கிணறு இவைகளை நாம் உருவாக்கினோமே தவிர அருவிகளை, ஆறுகளை உருவாக்க வில்லை. ஆற்றை உருவாக்கியது அருவி. அருவியை உருவாக்கியது மழை. அந்த அருவி, மலைகள் ஆகியன தோன்ற காரணம் காடுகள். இந்த அறிவியலின் உண்மையை அன்பு பிள்ளைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பனை மரம்
உங்களால் ஆறுகளை உருவாக்க முடியாது. மணலை உருவாக்க முடியாது. இதனையெல்லாம் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் வீடு எப்படி கட்டுவது என்கிறார்கள். நமது முன்னோர் இத்தனை ஆண்டுகள் வீடு கட்டி உள்ளனரே, அவர்கள் ஆற்று மணலை அழித்து தான் கட்டினார்களா?.
மணல் அள்ள ஆந்திராவில் தடை, கேரளாவில் தடை, கர்நாடகாவில் தடை, ஆனால் தமிழகத்தில் மணல் அள்ளி ஆறுகளை கொள்ளையடித்து விட்டார்கள். 
பனைமரம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று தண்ணீரை கொண்டு வரும். அதற்கு பக்க வேர்கள் கிடையாது. ஆணி வேர் மட்டுமே உண்டு. கிணறுகளை சுற்றி 10 பனைமரம் இருந்தால் தண்ணீர் வற்றவே வற்றாது என்பார்கள். மண்ணின் வளம் இது. பாலைவனத்தில் வளராது. ஆனால் வறண்ட நிலத்தில் வளரும். வறண்ட நிலத்தில் வளரும் பனைமரமே சாகிறது என்றால் உன் நிலம் பாலைவனமாக மாறி விட்டது என்பதை புரிந்த கொள்ள வேண்டும்.
வாசிங் மெஷின்
 தற்போது இலவசமாக வாசிங் மெஷின் தருவதாக கூறுகிறார்கள். ஒரு முறை தருவார்கள். அது பழுது ஆகி விட்டால் மறுபடியும் தருவார்களா?. அதற்கு பதிலாக ஒரு வேலையை தாருங்கள். அதற்கு ஒரு வருமானத்தை தாருங்கள். நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்றால் பதில் இல்லை. இன்றைய ஆட்சியில் தண்ணீரை கூட காசு கொடுத்து தான் வாங்க வேண்டியுள்ளது.  இந்த தேர்தலை வரலாறு நமக்காக தந்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தீய ஆட்சி முறை ஒளிந்து சுயாட்சி உருவாக வேண்டாமா?, பண நாயகம் ஒழிந்து ஜனநாயம் மலர வேண்டாமா?. தரமான மருத்துவம், தூய குடிநீர், சுவாசிக்க நல்ல காற்று, தடையில்லா மின்சாரம் இவையெல்லாம் வேண்டுமானால் விவசாய சின்னத்தில் வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்யுங்கள். இது மாற்றத்திற்கான காலம். மாறுவோம். மாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
குளித்தலை
குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீனி.பிரகாசுக்கு குளித்தலை பஸ் நிலையம் எதிரே திறந்த வேனில் நின்றபடி சீமான் பேசுகையில், நாங்கள் தனியே நிற்போம், தனித்துவத்தோடு நிற்போம், உயர்ந்த தத்துவத்தோடு நிற்போம் என்பது எங்கள் கோட்பாடு. திராவிட கட்சிகள் இருக்கும் ஏழ்மை ஒழியாது. ஊழல் ஒழியாது. லஞ்சம் ஒழியாது, நாடும் செழிக்காது. புரட்சி எப்போதும் வெல்லும். நாளை வெற்றி அதை சொல்லும் என பேசினார்.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ம.அனிதா பர்வீனை ஆதரித்து பள்ளபட்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா விடுதலை பெற்ற பிறகு காயிதே மில்லத் இந்திய மொழிகளில் முதன்மையான தொன்மையான மொழி தமிழ் மொழி. இது ஆட்சிமொழியாக வர வேண்டும் என்று கூறினார். நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பு அம்மா என்று அழைத்தவன். இஸ்லாம் எங்கள் வழி, தமிழே எங்கள் மொழி என்று கூறினார். இவ்வளவு சிறப்பு பெருமைமிக்க இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அரவக்குறிச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிதா பர்வீனுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

Next Story