சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தம்


சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 27 March 2021 2:00 AM IST (Updated: 27 March 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

நீர் மட்டம் குறைந்ததால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணியை நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில்  வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. 
ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக் காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக  வரும். 

சென்னைக்கு குடிநீர்

ஏரியின் மொத்த நீர்மட்ட அளவு 47.50அடியாகும். இதன் மூலம் சுமார் 44 ஆயிரத்து 156 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியின் நீர் மட்டத்திற்கு ஏற்ப வினாடிக்கு 76 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இதற்கிடையே இந்த ஆண்டு வீராணம் ஏரி 2 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியை பாதுகாக்க லால்பேட்டை வெள்ளியங்கால் ஓடை, சேத்தியாத்தோப்பு வி. என். எஸ். மதகு மூலம் உபரி நீரை வெளியேற்றினர். 

கதவணைகள்

இதனால் ஏரி நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. மேலும் வீராணம் ஏரியில் உள்ள பழுதடைந்துள்ள கதவணைகள் கட்டுவதற்காக மற்றும் வாய்க்கால்களில் தடுப்புச்சுவர் அமைப்பதற்காக ரூ. 75 கோடியில் பணிகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 
இந்த பணிகள் செய்வதற்காக தற்போது வீராணம் ஏரி நீர் மட்டத்தை உயர்த்தாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் சென்னை மக்களின் குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வந்தனர்.

தண்ணீர் நிறுத்தம்

ஆனாலும் ஏரியில் தொடங்கப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பதற் கான வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதனால் ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதன்படி நேற்றைய நீர்மட்டம் 39.30 அடியாக இருந்தது. இதன் காரணமாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதை முற்றிலும் நிறுத்திவிட்டனர். 
இருப்பினும் இதற்கு மாறாக மெட்ரோ நிர்வாகம், வடலூர் அருகே உள்ள வாலாஜா ஏரி மற்றும் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்து சென்னைக்கு அனுப்பி வருகின்றனர்.

பணிகளை முடிக்க வேண்டும்

இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டு வீராணம் ஏரியில் 38 அடி தண்ணீர் இருக்கும் வரையிலும், சென்னைக்கு தண்ணீர் அனுப்பினோம். ஆனால் தற்போது 39.30 அடி தண்ணீர் உள்ளது. இருப்பினும் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணியை முற்றிலும் நிறுத்தி உள்ளோம். இதற்கு காரணம் வீராணம் ஏரியில் ரூ. 75 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை இந்த கோடைக்காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றார்.

Next Story