ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது; சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது; சுகாதார பணிகள் துணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 26 March 2021 9:12 PM GMT (Updated: 26 March 2021 9:12 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது என்று மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறினார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது என்று மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறினார்.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீண்டும் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் கோவிசீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகிறது. பொதுமக்களும் பலர் ஆவர்மாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள்.
தட்டுப்பாடு இல்லை
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் முன் களப்பணியாளர்கள், தேர்தல் பணியாற்ற உள்ள அரசுத்துறை அலுவலர்கள் என 20 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி பொதுமக்கள் தரப்பில் இதுவரை 28 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக வருகிறார்கள். கோவிசீல்டு, கோவேக்சின் 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன.
மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவு இருப்பு உள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் நலமாக உள்ளனர். எனவே 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story