போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 27 March 2021 2:59 AM IST (Updated: 27 March 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகரில் வாகன ஓட்டிகளால் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி, குன்னம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கொளப்பாடி- வேப்பூர் சாலையில் கல்லங்காடு அருகே ஒரே மொபட்டில் 6 பேர் சென்ற போது, எதிரே வந்த கார் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற 6 பேரில், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 

அதன்பிறகும் கூட பெரம்பலூர் நகர்ப்பகுதியில் சாலை போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் சரியாக கடைபிடிப்பதில்லை.
இருசக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதை மறந்து, 3 அல்லது 4 பேர் செல்கின்றனர். ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிச்செல்லப்படுகின்றனர். டிரைவர்கள் நகர்ப்பகுதியில் வரன்முறையற்று பல இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடைவீதியிலும் இதே பிரச்சினைதான். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களில் பலர் ஹெல்மெட்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களில் பலர் சீட் பெல்ட்டும் அணிவதில்லை. செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குகின்றனர்.
மேலும் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச்செல்வதும் தொடர் கதையாக உள்ளது. 

போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுவதால் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. 
எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story