கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் 2 பேர் கைது
பெரம்பலூரில் கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு சங்குபேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கோட்டை என்ற செங்கோட்டுவேல் (வயது 30). கஞ்சா வியாபாரியான இவர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலையானார். இந்நிலையில் செங்கோட்டுவேல் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே நாவல்மரத்தெருவில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் செங்கோட்டுவேலை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் செங்கோட்டுவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக அரிவாள் வெட்டை தடுத்த செங்கோட்டுவேலின் நண்பர்களான விக்னேஷ், முகமது மாலிக் ஆகிய 2 பேரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியதில், அவர்கள் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை வலைவீசி தேடி வந்தனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், செங்கோட்டுவேலை, முன்விரோதம் காரணமாக அவரது கூட்டாளிகளான பெரம்பலூர் வடக்கு மாதவி ரோட்டை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அய்யனார் (20), அவரது அண்ணன்கள் ராமராஜ் (26), சிவா மற்றும் அறிவழகன், சண்முகம், சதீஷ் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி செங்கோட்டுவேலின் உறவினர்கள் சங்குபேட்டையில் நேற்று காலை சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக அய்யனாரும், அவரது அண்ணன் ராமராஜும் திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். மேலும் ஆலம்பாடி ரோடு அன்பு நகரை சேர்ந்த நடராஜன் மகன் அறிவழகன், அரணாரை வடக்கு காலனியை சேர்ந்த பொன்னுசாமி மகன் சண்முகம் (26) ஆகிய 2 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள சிவா, சதீஷ் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சரணடைந்த அய்யனார் மீது பல்வேறு வழக்குகள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story