சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 27 March 2021 3:05 AM IST (Updated: 27 March 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், திரவியப்பொடி, மாவுப்பொடி உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலகரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சின்னவளையம், பாப்பாக்குடி, மீன்சுருட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் மீன்சுருட்டியில் உள்ள சொக்கலிகேஸ்வரர் சிவன் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடை பெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்திபெருமானுக்கு மஞ்சள் பொடி, மாவுப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சனம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்தி பெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Next Story