திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இன்று தெப்ப உற்சவம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்ப உற்சவம் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
மலைக்கோட்டை,
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்ப உற்சவம் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் தாயுமானவர் திருமேனியில் மாலை நேரத்தில் சூரிய ஒளிபட்டு பொன் வண்ணமாக பக்தர்களுக்கு தாயுமானசுவாமி காட்சி அளிப்பார்.
தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற (சோம ரோகிணி) தெப்பகுளம் கரிகால் சோழனால் கட்டப்பட்டுள்ளது. இந்த தெப்பக்குளத்தின் நடு பகுதியில் அழகிய நீராழி மண்டபம் விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்டது.
தெப்பத்திருவிழா
இந்த தெப்பகுளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு தெப்பத்திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் உத்திரத்திற்கு முந்தைய நாள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று மாலை முதல் சுவாமி அம்பாளுக்கு ஒவ்வொருநாளும் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடு நடைபெற்று வருகிறது. தெப்பக்குளத்தின் நடு பகுதியில் உள்ள நீராழி மண்டபம் மற்றும் மலைக்கோட்டை மேலே உள்ள கோபுரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று(சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story