50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியைகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் வாக்குச்சாவடி அதிகாரிகள் நியமனத்தில் அதிருப்தி; 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பணி வழங்க கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வாக்குச்சாவடி அதிகாரிகளாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியைகளை தொலை தூரத்தில் நியமனம் செய்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பணி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வாக்குச்சாவடி அதிகாரிகளாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியைகளை தொலை தூரத்தில் நியமனம் செய்து இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பணி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வாக்குச்சாவடி அதிகாரிகள்
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் இணையம் மூலம் கணினி வழி சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குச்சாவடி அதிகாரிகள் கணினி வழி சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில், ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள ஆசிரிய- ஆசிரியைகளுக்கு மிக தொலைவில் பணி வழங்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன. அந்தியூர், கோபி, பவானிசாகர் பகுதிகளில் பணியாற்றி வரும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என்றும், ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதிகளில் பணியாற்றி வருபவர்களுக்கு அந்தியூர், பெருந்துறை, பவானி, பவானிசாகர், கோபி தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது ஆசிரியைகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியைகளுக்கு அதிக தொலைவில் பணி என்பது மனஉளைச்சல் அளிப்பதாக தெரிவித்து உள்ளனர்.
ஆசிரியைகள்-பெண் போலீசார்
இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளன. இங்கு பணியாற்ற சுமார் 14 ஆயிரம் பேர் வாக்குச்சாவடி முதல் நிலை அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்கள் என்ற நிலையில் பணியாற்ற இருக்கிறார்கள். தேர்தல் பணியில் அதிக அளவில் பணியாற்றுபவர்கள் ஆசிரிய-ஆசிரியைகள். வழக்கமாக அனைத்து தேர்தல்களிலும் ஆசிரிய-ஆசிரியைகள்தான் வாக்குச்சாவடி அதிகாரிகளாக இருப்பார்கள். இது வழக்கமான பணி என்றாலும், பணியிடங்கள் அருகாமையில் வழங்கப்படும்.
ஆனால் இந்த முறை கணினி வழி சுழற்சி முறை என்ற பெயரில் ஆசிரியைகள் 50 கிலோ மீட்டர் தொலைவில் சென்று பணியாற்றும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதில் என்ன சிக்கல் என்றால், தேர்தலுக்கு முந்தைய நாள் அதாவது 5-ந் தேதிதான் குறிப்பிட்ட ஆசிரியை எந்த வாக்குச்சாவடியில் பணியாற்ற இருக்கிறார் என்பது தெரியவரும். அவர் உடனடியாக அதற்கான பணி உத்தரவினை பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்து, பின்னர் அதிகாலையில் எழுந்து வாக்குப்பதிவுக்கு தயாராக வேண்டும். அங்கு போதிய கழிப்பிட வசதி, ஓய்வு அறை, குளியல் அறை இருக்காது. அப்படியே இருந்தாலும் பணியில் இருக்கும் போலீசார், ஆண்-பெண் பணியாளர்கள் என்று அனைவரும் ஒரே நேரத்தில் தயார் ஆக முடியாத நிலை ஏற்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியைகளைப்போன்று பெண் போலீசாரும் இதே பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள். பொதுவாக பெண்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கும். பொதுவெளியில் அவர்கள் நிம்மதியாக பணியாற்ற பாதுகாப்பான ஓய்வறை வசதி வேண்டும். தேர்தல் நேரத்தில் பணியாற்றும் ஆசிரியைகள்-பெண் போலீசார் இந்த வசதிகள் இல்லாமல் தவிப்பது தொடர்கதையாகி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் பெண்களுக்கு அவர்களின் வீடுகள் அல்லது பணியாற்றும் பகுதிகளில் இருந்து நீண்ட தொலைவில் பணி என்பது சிரமத்தை ஏற்படுத்தும். எனவே பெண்களின் பிரச்சினைகளை மனதில் கருதி ஆசிரியைகள், பெண் போலீசாருக்கு குறுகிய தூரத்தில் வாக்குச்சாவடி பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
20 கிலோ மீட்டருக்குள் பணி
ஆசிரியை ஒருவர் கூறும்போது, தேர்தலுக்கு முன்னதாகவே தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மூலம் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அப்போது ஆசிரியைகளுக்கு நேரும் பிரச்சினைகள் குறித்து எடுத்துக்கூறி ஆசிரியைகளுக்கு 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பணி வழங்க வேண்டும் என்று கேட்டு இருந்தோம். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியைகளுக்கு மிகக்குறைந்த தொலைவில் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அப்போது மாவட்ட கலெக்டர் அப்படியே செய்வதாக கூறினார். ஆனால், ஈரோடு மேற்கில் பணியாற்றும் எனக்கு அந்தியூர் தொகுதியில் தேர்தல் பணியாற்றவும், 27-ந் தேதி (இன்று) தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள உத்தரவு அனுப்பப்பட்டு இருக்கிறது. என்னைப்போல் ஆயிரக்கணக்கான ஆசிரியைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது, அன்றாட கடமைகள் செய்வது என்று பல பிரச்சினைகள் உள்ளன. நாங்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால், அதிக தொலைவு என்பது எங்களுக்கு பிரச்சினைதான். எனவே அதிகாரிகள் பெண்களின் அடிப்படை பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story