நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம் பணமுதலைகளை இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஓடஓட விரட்டுவார்கள்; ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் பேச்சு


நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம் பணமுதலைகளை இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஓடஓட விரட்டுவார்கள்; ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 27 March 2021 3:50 AM IST (Updated: 27 March 2021 3:50 AM IST)
t-max-icont-min-icon

நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். பணமுதலைகளை இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஓடஓட விரட்டுவார்கள் என்று ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

ஈரோடு
நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். பணமுதலைகளை இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஓடஓட விரட்டுவார்கள் என்று ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
டி.டி.வி.தினகரன் பிரசாரம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரஷர் குக்கர் சின்னத்துக்கும், தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து முரசு சின்னத்துக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் டி.தங்கராஜ் (மொடக்குறிச்சி), எஸ்.சிவசுப்பிரமணியன் (ஈரோடு மேற்கு), சா.ஆ.முத்துக்குமரன் (ஈரோடு கிழக்கு) மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர் பி.ஆர்.குழந்தைவேல் (பெருந்துறை) ஆகியோரை ஆதரித்து ஈரோடு அருகே உள்ள நசியனூர் பகுதியில் நேற்று டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார்.
பண மூட்டை
அப்போது டி.டி.வி.தினகரன் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் பேசியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பிரஷர் குக்கர் சின்னத்திலும், தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும். நாங்கள் மக்களை நம்பிதான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். ஆனால் ஆளும் கட்சியினர் பண மூட்டைகளை நம்பி தேர்தலில் நிற்கிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளில் கஜானாவை காலி செய்து விட்டனர். தற்போது தமிழகத்தின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கு காரணம் ஆளும் கட்சியினர் ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவது போல் ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம் கொடுத்து வாக்காளர்களையும் வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர்.
மக்களின் வரிப்பணம்
அமைச்சர்கள் தொகுதி என்றால் ரூ.100 கோடி முதல் ரூ.300 கோடி வரையும், மற்ற தொகுதிகளில் ரூ.50 கோடி வரையும் செலவு செய்கிறார்கள். இவை அனைத்தும் மக்களின் வரிப்பணம் ஆகும். மக்களின் வரிப்பணத்தை மக்களிடமே திருப்பி கொடுக்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் நான் வெற்றிபெற்ற பின்னர் தொகுதி மக்களுக்கு நன்றி கூற சென்றேன்.
அப்போது பொதுமக்களிடம் கேட்டபோது ஆளும் கட்சியினர் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை கொடுத்ததாக கூறினார்கள். எனினும் மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தார்கள். அதேபோல தான் இந்த தேர்தலிலும் நடக்க உள்ளது. பண முதலைகளை இந்த தேர்தலில் மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள்.
இலவு காத்த கிளி போல...
எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று தி.மு.க. இலவு காத்த கிளி போல காத்து கிடக்கிறது. அதற்கு நீங்கள் வாய்ப்பு அளித்து விடக்கூடாது. ஆளும் கட்சியினர் ஏரி, குளங்களை தூர்வாரினார்களோ? இல்லையோ? தமிழக கஜானாவை தூர்வாரி விட்டனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் சொத்துகளை சூறையாடி விடுவார்கள்.
ஆளும் கட்சியினரையும், எதிர்கட்சியினரையும் மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது உங்களுடைய கடமை ஆகும்.
ரூ.60 ஆயிரம் கோடி
இரு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் எதையும் செயல்படுத்த முடியாத திட்டங்களை அறிவித்துள்ளனர். அவர்கள் அறிவித்துள்ள திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் தேவைப்படும். இதை செய்ய முடியாது என்பதை தெரிந்துதான், முதல் -அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஆனால் நாங்கள் அப்படி அல்ல. காவிரியின் இரு புறங்களையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்போம். காவிரியில் சாய -சலவை மற்றும் சாக்கடை கலப்பதை முற்றிலும் தடுப்போம். படித்த இளைஞர்கள் உள்ள குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவோம். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
ஊழல் இல்லாத ஆட்சி
படித்துவிட்டு விவசாயம் பார்க்க விரும்பும் இளைஞர்களுக்கு 5 ஏக்கர் நிலம் தருவோம். முதியவர்களுக்கு உதவித்தொகை முறையாக வழங்கப்படும். எனவே, எதை நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்து, எங்களை வெற்றி பெற செய்யுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம். டெண்டரில் முறைகேடு இருக்காது.
தமிழகத்தின் அனைத்து பணங்களும் ஆட்சியாளர்களின் கைகளுக்கு சென்று விட்டது. தேர்தல் முடிந்த பின்னர் அந்த பணம் வெளியில் வரும். இந்த தீய சக்தியையும், துரோக சக்தியையும் நீங்கள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
மும்முனை மின்சாரம்
ஈரோட்டில் கண்டிப்பாக சாயக்கழிவுநீரை சுத்திகரிக்க பொது சுத்திரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் மகளிர் கல்லூரி கட்டப்படும். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு கலப்பது தடுக்கப்படும். கீழ்பவானி பாசன பகுதி அதிகரிக்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு அரசே நூல் வழங்கும். ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் கட்டப்படும்.
பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகள் சுத்தப்படுத்தப்படும். கமிஷன் மண்டி மற்றும் புரோக்கர்கள் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தமிழக வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அனைத்து துறைகளும் முன்னேற நீங்கள் அனைவரும் அ.ம.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வர நீங்கள் அனைவரும் பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.
பின்னர் கோபி சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் துளசிமணியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கோபி பஸ் நிலையத்துக்கு டி.டி.வி. தினகரன் இரவு 10.05 மணி அளவில் வந்தார். 10 மணிக்கு மேல் பிரசாரத்துக்கு அனுமதி கிடையாது என்பதால் டி.டி.வி. தினகரன் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் கையை மட்டும் காட்டிவிட்டு் சென்றார்.

Next Story