எடப்பாடி உள்பட 6 தொகுதிகளுக்கு 2,819 வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக அனுப்பி வைப்பு


எடப்பாடி உள்பட 6 தொகுதிகளுக்கு 2,819 வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 27 March 2021 4:47 AM IST (Updated: 27 March 2021 4:47 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி உள்பட 6 தொகுதிகளுக்கு 2 ஆயிரத்து 819 வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம்:
எடப்பாடி உள்பட 6 தொகுதிகளுக்கு 2 ஆயிரத்து 819 வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
சேலம் மாவட்டத்தில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய 11 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் 4 ஆயிரத்து 280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எடப்பாடி உள்பட 6 தொகுதிகளில் அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச்சாவடிகளில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்பட்டது. இதற்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் 750 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில், நேற்று காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இதையடுத்து சேலம் மேற்கு, தெற்கு, வடக்கு, வீரபாண்டி, சங்ககிரி, எடப்பாடி ஆகிய 6 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்கு 2 ஆயிரத்து 819 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் செய்யப்பட்டது. பின்னர் கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்து வாக்குப்பதிவு எந்திரங்கள் எடப்பாடி உள்பட 6 தொகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. 
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் 6 தொகுதிகளிலும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

Next Story