சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி 31-ந் தேதி தொடக்கம்
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
சேலம்:
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு பொது பார்வையாளர் டாக்டர் ரூபேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 381 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 19 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு உள்ளன. சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட 675 பேரும், மாற்றுத்திறனாளிகள் 112 பேரும் என மொத்தம் 787 பேர் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
அவர்களிடம் இருந்து வாக்குகளை சேகரிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் தலா ஒரு வாக்குச்சாவடி அலுவலர், போலீசார், நுண் பார்வையாளர், வீடியோ ஒளிப்பதிவாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். தபால் வாக்கு சேகரிப்பு அனைத்து பணிகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.
31-ந் தேதி தொடக்கம்
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு இன்று (சனிக்கிழமை) அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் கல்லூரி வரவேற்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டியில் தபால் வாக்குகளை செலுத்துவார்கள்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பட்டியல் பொருத்தும் பணி 29, 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story