நன்னிலம் தொகுதியை அமைதி பூங்காவாக வைத்துள்ளேன்; அமைச்சர் காமராஜ் பிரசாரம்
நன்னிலம் தொகுதியை அமைதி பூங்காவாக வைத்துள்ளேன் என்று அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்தார்.
பிரசாரம்
நன்னிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் காமராஜ் நன்னிலம் ஒன்றியத்தில் சொரக்குடி, மூங்கில்குடி, விசலூர், மகிழஞ்சேரி, பனங்குடி, திருக்கண்டீஸ்வரம், மூலங்குடி, தட்டாத்திமூலை, நாடாகுடி, வீதிவிடங்கன், பருத்தியூர், சேங்கனூர், வாழ்க்கை ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். சொரக்குடியில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு அமைச்சர் காமராஜ் பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தை தொடங்க வந்த அமைச்சரை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வந்து சந்தித்தனர். அப்போது எங்கள் பகுதிக்கு நீங்கள் நிறைய உதவிகள் செய்து இருக்கிறீர்கள். அந்த நன்றி உணர்வு எங்களுக்கு உள்ளது. தற்போது உங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்து இருக்கிறீர்கள். அதிக நேரம் நீங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். அதனால் தேர்தல் பிரசாரத்தை குறைத்து கொண்டு ஓய்வெடுங்கள். உங்களுக்காக நாங்கள் பிரசாரம் செய்து வெற்றி பெற வைக்கிறோம் என தெரிவித்தனர். அவர்களுக்கு அமைச்சர் காமராஜ் நன்றி தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ஓய்வெடுங்கள்
நன்னிலம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் என்னை இப்பகுதியை சேர்ந்த சகோதரிகள் என்னை சந்தித்து ஓய்வெடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உங்களை வெற்றி பெற வைக்கிறோம் என்று சொன்னார்கள். என் மீது கொண்ட அன்பின் காரணமாக வாஞ்சையுடன் அவர்கள் தெரிவித்தது என்னை உற்சாகப்படுத்தி உள்ளது. நான் ஒரு நாளும் ஓய்வில் இருந்தவனில்லை. தொடர்ந்து பணியாற்றி வந்திருக்கிறேன். உங்களுடைய அன்பு என்னை திக்குமுக்காட வைக்கிறது. இதற்காக என் காலம் முழுவதும் நன்றியுடையவனாக இருப்பேன். கடந்த 10
ஆண்டுகளில் சட்டசபை உறுப்பினராக, உணவுத்துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறேன்.
அமைதி பூங்கா
இந்த 10 ஆண்டில் நன்னிலம் தொகுதியினை அமைதிப் பூங்காவாக வைத்துள்ளேன். சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு இடம் கொடுத்ததில்லை. மத சண்டை, சாதி சண்டைகளுக்கு ஆதரவளித்தில்லை. அனைத்து உயிரும், உடமைகளும் முக்கியம் என்று நினைக்க கூடியவன். அதனால் தான் இந்த தொகுதியில் எந்த பிரச்சினைகளும் இருக்கக்கூடாது என்று எண்ணியே செயல்பட்டு வந்துள்ளேன். இதுபோன்று அடுத்த ஆண்டுகளிலும் இந்த நிலையை மேற்கொள்வேன். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்.
கல்வி கடன் ரத்து
விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் ரத்து செய்யப்படும். குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். ஆண்டிற்கு 6 சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும். வாஷிங் மெஷின் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகள் கூறப்பட்டு இருக்கிறது. இந்த திட்டங்கள் எல்லாம் உடனடியாக நிறைவேற்றப்படும். இந்த திட்டங்கள் தொடர எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்ேபாது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story