போடி தொகுதியில் தீவிர பிரசாரம்: மகளிர் சுயஉதவிக்குழுவினர் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம்; துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி


அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குசேகரித்து பேசியபோது
x
அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குசேகரித்து பேசியபோது
தினத்தந்தி 27 March 2021 2:45 AM (Updated: 27 March 2021 2:38 AM)
t-max-icont-min-icon

மகளிர் சுயஉதவிக்குழுவினர் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று போடி தொகுதியில் தீவிர பிரசாரம் செய்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம்
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் 3வது முறையாக போட்டியிடுகிறார். போடி தொகுதிக்கு உட்பட்ட கொடுவிலார்பட்டி, சிவலிங்கநாயக்கன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், சங்ககோணாம்பட்டி, கோபாலபுரம், அம்பாசமுத்திரம், கோவிந்தநகரம், சோலைத்தேவன்பட்டி, லட்சுமிபுரம், குப்பிநாயக்கன்பட்டி, தென்றல்நகர், கருப்பத்தேவன்பட்டி, ஜங்கால்பட்டி, வெங்கடாசலபுரம், ஸ்ரீரெங்காபுரம், நாகலாபுரம் ஆகிய ஊர்களில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.ஒவ்வொரு ஊரிலும் மக்கள் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். மக்கள் மத்தியில் பிரசார ஜீப்பில் நின்றபடி அவர் வாக்குசேகரித்து பேசினார். 

கொடுவிலார்பட்டியில் நடந்த பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து இருக்கிறது. தி.மு.க.வும் ஆட்சி செய்துள்ளது. எம்.ஜி.ஆர். 3 முறை முதல்அமைச்சராக, யாராலும் வெல்ல முடியாத முதல்அமைச்சராக தன்னிறைவு திட்டம் மற்றும் சத்துணவு திட்டம் தந்து சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். எம்.ஜி.ஆருக்கு பின்னர் 16 ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்அமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்தார். இந்த கால கட்டத்தில் மக்களிடம் இருந்து வரியின் மூலம் பெறும் நிதியை மீண்டும் தொலைநோக்கு திட்டங்களின் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

சமூக பாதுகாப்பு திட்டங்கள்
மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் ஆகியவற்றை நிறைவாக ஆளுகின்ற நல்ல ஆட்சியாளர்கள் தரவேண்டும். நல்ல ஆட்சியாளராக ஜெயலலிதா இருந்ததால் 20 கிலோ அரிசியை மாதந்தோறும் அனைத்து பொதுமக்களுக்கும் விலையில்லாமல் வழங்கி உணவு பாதுகாப்பை உறுதி செய்தார்.2011ம் ஆண்டு முதல்அமைச்சராக ஜெயலலிதா பதவியேற்று செய்த சமூக பாதுகாப்பு திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்களின் பயனாக, 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. அளிக்கும் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவோம் என்றோம். முழுமையாக அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. தாலிக்கு 4 கிராம் தங்கம் திருமண நிதி உதவி அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தாலிக்கு 4 கிராம் தங்கம் என்பதை 8 கிராமாக உயர்த்தி வழங்கினோம்.

முழுமையாக தள்ளுபடி
தேர்தல் அறிக்கையில், அம்மா குலவிளக்கு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1, 500 வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். உறுதியாக அந்த திட்டத்தை நிறைவேற்றுவோம். கடந்த 
முறை விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கியது போல், இந்த முறை விலையில்லா வாஷிங் மெஷின் வழங்குவோம். முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை ரூ.1, 000ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுயஉதவிக்குழுவினர் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.போடி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்வு செய்யப்பட்டு உங்களில் ஒருவனாக இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்காக தொண்டாற்ற மீண்டும் இரட்டை இலை சின்னத்துக்கு 
ஆதரவு தாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story